Photo Credit: Unsplash/NASA
சீன விஞ்ஞானிகள் 2020 நிலவு பயணத்திலிருந்து மீண்டும் கொண்டு வரப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி அதிக அளவு தண்ணீரை உற்பத்தி செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர் என சீனாவின் ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு, அமெரிக்க அப்பல்லோ விண்வெளி வீரர்கள் சந்திர மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தனர். அது தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. இதனால் சந்திர மண் முற்றிலும் வறண்டது என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இந்த முடிவை நாசா ஆதரித்தது. இது சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இல்லை என்பதை உறுதி செய்தது. இருப்பினும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மற்றும் மேலதிக ஆய்வுகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் சீனாவின் Chang'e-5 ராக்கெட் 44 ஆண்டுகளில் முதல் முறையாக நிலவில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. நிலவு மண் மாதிரிகளை மீட்டெடுத்த முதல் திட்டம் என்ற பெருமை இதன்மூலம் சீனாவுக்கு கிடைத்தது. சீன அரசு நடத்தும் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள், இந்த "நிலவு மண்ணில்" உள்ள தாதுக்கள் அதிக அளவு ஹைட்ரஜனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது மிக அதிக வெப்பநிலையில் வெப்பமடையும் போது மற்ற உறுப்புகளுடன் வினைபுரிந்து நீராவியை உருவாக்குகிறது என CCTV ஊடகம் தெரிவித்துள்ளது.
நாசாவின் தலைவர் பில் நெல்சன், சீனாவின் விண்வெளித் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டினார். நிலவில் அதிக வளங்கள் நிறைந்த இடங்களில் பெய்ஜிங் ஆதிக்கம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பலமுறை எச்சரிக்கையும் செய்துள்ளார்.
சீனா கண்டறிந்த புதிய முறையைப் பயன்படுத்தி ஒரு மெட்ரிக் டன் நிலவு மண்ணில் சுமார் 51 முதல் 76 கிலோகிராம் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். இது 50 பேரின் தினசரி குடிநீர் நுகர்வுக்கு சமம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மூன்று வருட ஆராய்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் சரிபார்த்தலுக்குப் பிறகு, அதிக அளவு தண்ணீரை உற்பத்தி செய்ய நிலவு மண்ணைப் பயன்படுத்தும் புத்தம் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. இது எதிர்கால சந்திர அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் விண்வெளி கட்டுமானத்திற்கான முக்கியமான வடிவமைப்பு அடிப்படையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரனின் வளங்களைக் கண்டுபிடித்ததன் மூலம் அமெரிக்கா-சீனா இடையேயான உறவில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். சமீபத்திய மற்றும் எதிர்கால சந்திர ஆய்வுகள் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை (ILRS) உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று சீனா நம்புகிறது. இது ரஷ்யாவுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியில் சீனா முன்னணியில் உள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் "விண்வெளி நிலையம்" அமைக்க 2035 ஆம் ஆண்டை இலக்காக சீனா நிர்ணயித்துள்ளது. 2045க்குள் சந்திரனைச் சுற்றிவரும் விண்வெளி நிலையமும் உருவாக்கும் திட்டம் இருக்கிறது. சீன விஞ்ஞானிகள் ஏற்கனவே ஜூன் மாதம் Chang'e-6 திட்டத்தின் மூலம் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்திர மாதிரிகள் மீது சோதனைகளை நடத்தி வரும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு அறிவிப்பு வந்துள்ளது.
Chang'e-5 பணியானது சந்திரனின் அருகிலுள்ள பக்கத்திலிருந்து மாதிரிகளை மீண்டும் கொண்டு வந்தாலும், Chang'e-6 சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலிருந்து சந்திர மண்ணை மீட்டெடுத்தது. இந்த பகுதி எப்போதுமே பூமியிலிருந்து விலகிச் செல்கிறது. யாரும் காண முடியாத இருண்ட மறுபக்கம் என கூறப்படுகிறது.
நிலவில் நீரின் முக்கியத்துவம் நிரந்தர மனித இருப்பை சாத்தியமாக்குவதற்கு அப்பாற்பட்டது. ஆனால் நிலவில் காணப்படும் ஹைட்ரஜனை கொண்டு ராக்கெட் எரிபொருளை உருவாக்கலாம். இது செவ்வாய் மற்றும் பிற கோள்களுக்கு ராக்கெட் அனுப்ப தேவையான எரிபொருளை தயாரிக்க உதவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்