சொந்த போட்டியில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள ரியல்மீ நிறுவனம் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக பல யுக்திகளை காயாண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் வண்ணம் ஏராளமான வகைகளில் மாறுபட்ட விலை வரம்புகளில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இளைஞர்கள் மற்றும் வருடத்திற்கு இரண்டு முறை தங்கள் ஸ்மார்ட்போன்களை மாற்றும் தொழில்நுட்ப ஆர்வளர்கள் ஆகியோரை மையமாக வைத்துள்ள இந்த நிறுவனம், ஒவ்வொரு சில மாதங்களிலும் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை புதுப்பித்தும், புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளது. அந்த வகையில், சியோமிக்கு உலகின் முதல் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனை அறிவித்த நிறுவனம் என்ற பெயரை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை அறிவிப்பு என்பதைவிட அந்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான Realme XT-யின் அறிமுகம் என்றே குறிப்பிடலாம்.
Realme X, Realme 5, மற்றும் Realme 5 Pro என்று வரிசையான ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு பின்னர், தன் ஸ்மார்ட்போன் குடும்பத்தில் Realme XT என ஒரு புதிய ஸ்மார்ட்போனை இணைத்துள்ளது. 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்பதை தவிர்த்து வேறு எந்த பெரிய சிறப்பம்சந்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிடவில்லை. ரியல்மீ 5 குடும்பத்தின் ஒரு ஸ்மார்ட்போன் போலவே காட்சியளிக்கிறது.
Realme XT ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் Realme 5 Pro மற்றும் Realme X ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடையே ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனில் பிரீமியம் தோற்றத்திற்கான முழு நீள திரைக்கு வழிவகுக்கும் பாப்-அப் கேமரா கூட இடம்பெறவில்லை. ஆனால், Realme 5 Pro ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடுகையில், சில மேம்பாடுகளை கொண்டுள்ளது.
தோற்றத்தை பொருத்தவரை, இந்த Realme XT ஸ்மார்ட்போன் Realme 5 Pro போன்றே காட்சியளிக்கிறது. முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமரா, பின்புறத்தில் Realme 5 Pro போன்றே அதே கேமரா அமைப்பு. ஆனால், ஒரு படி மேலாக Realme XT ஸ்மார்ட்போனில் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
வண்ணங்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நீலம் (Pearl Blue) மற்றும் வெள்ளை (Silver Wing White) என்ற இரண்டு வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
திரையை பொருத்தவரை, Realme XT ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை கொண்டுள்ளது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. 4GB + 64GB, 6GB + 64GB, மற்றும் 8GB + 128GB என்று மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியுடன் 4,000mAh பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
தற்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி நமக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்கள், ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள் எந்த விலை வித்தியாசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அதே விலை வித்தியாசத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள், வெவ்வேறு விலை புள்ளிகளில், வெவ்வேறு வகை ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்த விலை பட்டியல் அமையும்.
Realme XT ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் டைப்-C சார்ஜர் போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் இடதுபுறத்தில் 3 ஸ்லாட்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், இரண்டு நானோ சிம் ஸ்மாட்களும், ஒரு மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டும் இடம்பெற்றுள்ளது. இதற்கு கீழே ஒலி அளவை கட்டுப்படுத்துவதற்கான வால்யூம் பட்டன்கள் இடம்பெற்றுள்ளது. வலது புறத்தில் பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது.
மென்பொருளை பொருத்தவரை Realme XT ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6.0.1 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
ஜூலை 2019 பாதுகாப்பு இணைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் “Ultra 64 MP” மோட் என்ற ஒரு வசதியும் இடம்பெற்றிருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் 64 மெகாபிக்சல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தரம் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது.
மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது அப்படியே Realme 5 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, இந்த ஸ்மார்ட்போனிற்கு Realme XT என்ற பெயருக்கு பதிலாக 'Realme 5 Pro Pro' எனவே பெயரிட்டிருக்கலாம் என தோன்றுகிறது. இதன் சிறப்பம்சங்கள் அப்படியாகவே அமைந்துள்ளது. இவ்வளவு வகைகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், தன் வாடிக்கையாளர்களுக்கு பல தேர்வுகளை ரியல்மீ நிறுவனம் வழங்குகிறது என்பது உண்மை. ஒரு குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். சற்று அதிகமான விலை அதைவிட சற்று அதிகமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். இந்த சங்கிலி அப்படியே தொடர்கிறது. ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் அனைத்து விதமான விலை விகிதத்திலும் அறிமுகமாகியுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனிற்கு போட்டியாகவே, ரியல்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஆனால், சியோமியுடனான போட்டியில் இந்த நிறுவனம் வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்