பயனர்களின் அந்தரங்கத் தகவல்களை தவறான முறையில் பகிர்ந்துகொண்டது தொடர்பான விவகாரத்தில் 400க்கும் மேற்பட்ட செயலிகளை (apps) ஃபேஸ்புக் தற்காலிகமாக நீக்கியுள்ளது. மேலும் இதில் உண்மையைக் கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து வருகிறது.
“செயலிகளைக் கட்டமைத்த டெவலப்பர்களின் மீது எழுந்த ஐயத்தின் காரணமாகவும் மக்கள் அவர்களிடம் பகிர்ந்த தகவல்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயத்தின் காரணமாகவும் இச்செயலிகளைத்ட் தற்காலிகமாக நீக்கியுள்ளோம். இவை தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன” என்று ஃபேஸ்புக்கின் தயாரிப்புப் பங்காண்மைப் பிரிவின் துணைத் தலைவர் ஆர்க்கிபாங் வலைப்பதிவில் கூறியுள்ளார்.
டானல்ட் டிரம்பின் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரைக்குப் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக்கிலுள்ள 87 மில்லியன் பயனர்களின் தகவல்களைத் திருடியிருக்கலாம் என்று ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) தகவல் பாதுகாப்பு மோசடி குறித்த சர்ச்சைக்குப் பிறகு மார்ச்சில் ஆப்ஸ்க்கு என்று தனிப்பிரிவை ஃபேஸ்புக் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்கிபாங் சமீபத்திய வலைப்பதிவில், “மைபர்சனாலிட்டி செயலி (myPersonality app) ஃபேஸ்புக்கின் ஆய்வுக்கு ஒப்புக்கொள்ளாததாலும்; அவர்கள் ஆய்வாளர்களுடனும் நிறுவனங்களுடனும் தனிநபர் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாலும் முடக்கப்பட்டுள்ளது. 2007இல் தொடங்கப்பட்ட இது 2012 வரை தீவிரமாக இயங்கி வந்துள்ளது. இதில் தகவல்களைப் பகிர்ந்த 40 இலட்சம் மக்களிடமும் இதுபற்றி அறிவிக்க ஃபேஸ்புக் முடிவுசெய்துள்ளது. தொடர்ந்து செயலிகளை ஆய்வுசெய்து, தேவையான மாற்றங்களை எங்கள் தளத்தில் அறிமுகப்படுத்துவோம். மக்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி வெளியானது முதலாக, ஃபேஸ்புக் செயலிகளில் தகவல் பகிர்வது தொடர்பான தனது விதிகளை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா சர்ர்சையால் அமெரிக்கப் பேரவையில் ஆஜராகி, தன்னிடம் சரமாரியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் விளக்கமளித்தார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதிலும் (Brexit) கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவின் பங்கு உள்ளதா என்று ஐயம் எழுப்பப்பட்டதும்; தனிநபர் தகவல்களை கசிந்ததற்காக ஐரோப்பிய யூனியனிடம் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்