Photo Credit: NASA
அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கி தவிப்பதால் நாசா ஒரு சவாலை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் விண்வெளிக்குச் சென்று, மொத்தம் 322 நாள்கள் தங்கியிருந்தார். இப்போது மீண்டும் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரரும், முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டனுமான புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்டார்லைனர் விண்கலனில் கடந்த ஜூன் மாதம் ஒருவாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விண்கலனின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளைச் செய்து, ஒரு வாரம் கழித்து மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று NASA தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரைச் சுமந்துகொண்டு விண்வெளி நோக்கிச் சென்று கொண்டிருந்த Starliner விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது, நாசாவும், போயிங் நிறுவனமும் Starliner ராக்கெட்டில் ஹீலியம் கசிவுகள் மற்றும் விண்கலத்தின் எதிர்வினை கட்டுப்பாட்டு உந்துதல்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தன. போயிங் விண்கலத்தின் உந்துதல் செயலிழப்பால் ஆய்வுகள் முடிந்தும், அவர்கள் பூமிக்குத் திரும்புவது வாரத்திலிருந்து மாதக்கணக்கில் தாமதமானது.
ஆரம்பத்தில் எட்டு நாள் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக அவர்கள் திரும்புவது பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத கால நீட்டிப்பு நாசாவின் விண்வெளி ராக்கெட்களின் நம்பகத்தன்மை மற்றும் எதிர்கால ஆய்வின் மீதான தாக்கம் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
நாசா மற்றும் போயிங் இடையே விவாதங்களுக்குப் பிறகு சவாலான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாசா கூடுதல் அபாயங்களை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. வீரர்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. ஸ்டார்லைனர் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறியதால் போயிங் நிறுவனத்தின் விண்வெளி திட்டங்கள் சரிவை கண்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள Starliner விண்கலனிற்குப் பின்னால் 10 வருட உழைப்பு உள்ளது. இந்த விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விண்வெளி வீரர்களையும் விண்வெளி நிலையத்தில் வைத்து, ஸ்டார்லைனரை பணியமர்த்தாமல் திருப்பி அனுப்பும் முடிவு எங்களுக்கு வருத்தமாக உள்ளது என நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.
இந்த நிலையில் எலான் மஸ்க்கின் spaceX களத்தில் இறங்கியிருக்கிறது. ஸ்டார்லைனர் செப்டம்பர் தொடக்கத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும். பின்னர், புதிய திட்டத்தின் கீழ் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் SpaceX நிறுவனத்தின் dragon விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் விண்வெளி மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றில் விரிவான பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள். பிப்ரவரி வரை விண்வெளியில் தங்கி இருக்கும் பணிக்கு அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என நாசா கூறியது. ஆனால் நீண்ட காலம் விண்வெளியில் தங்கி இருப்பது வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கிறது. விண்வெளி கதிர்வீச்சு, தனிமைப்படுத்தல் மற்றும் மைக்ரோ கிராவிட்டி போன்ற பாதிப்புகளை சந்திக்க வேண்டி உள்ளது. இத்தனை சிக்கல் இருந்தாலும் நாசா போயிங்கை முற்றிலுமாக கைவிட வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த நிறுவனம் வரலாற்று ரீதியாக பல ஒப்பந்ததாரர்களை விண்வெளி பயணங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்