இந்தியாவில் முதல்முறையாக 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஓஜாய் என பெயரிடப்பட்ட சிறுவர்களுக்கான ஸ்மார்ட் வாட்ச் போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தார்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் சிப்செட் மற்றும் கிடோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது. NSWD தொழிநுட்பங்கள் மூலம் இந்த புதிய தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த கிடோ வாட்ச் உலகத்திலேயே முதல் அனிமேட்டட் அண்ட்ராய்டு தயாரிப்பாக இருக்கிறது.
மெல்லிய எடை மற்றும் குழந்தைகளை கவரும் டிசையினை கொண்டுள்ளதால் சிறுவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அண்ட்ராய்டு மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள அப்டேட்கள் என அனைத்தும் வாட்சை ஆன் செய்யும்போதே திரையில் வரும் என்பது கூடுதல் வசதி.
மேலும் இந்த ஓஜாய் ஸ்மார்ட்வாட்ச் போனில் உள்ள குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 2100 சிப்செட்டால் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கும். மேலும் 4ஜி, 3ஜி, புளூடூத் மற்றும் வை-பை சிக்னல்கள் எளிதில் கிடைக்கும். சுமார் 1.4 இஞ்ச் அளவு திரையை கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் 4ஜி ரோம் மற்றும் 512 எம்.பி ரேமுடன் வெளியாகவுள்ளது.
புளூ மற்றும் பிங்க் நிறங்களில் இந்த ஓஜாய் ஸ்மார்ட் வாட்ச் போன் வெளியாகுவதால் பிள்ளைகளுக்கு அணிவதற்கும் பெற்றோர்களுக்கு கண்காணிக்க எளிமையாகவும் இருப்பதால் இந்த புதிய ஸ்மார்ட்வாட்சுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி.வெங்கட்ராமனிடம் கூறுகையில் ‘ ஓஜாய் ஸ்மார்ட்வாட்ச் போன் மிக தரமானதாக இருப்பதாகவும், ஆசியா மற்றும் இந்தியா அளவில் ஓஜாய் ஸ்மார்ட்வாட்ச் போன் நிச்சயமாக முதலிடம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்சால் பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையே பிணைப்பு ஏற்படும்' என தெரிவித்தார்.
இந்தியாவில் ரூபாய் 9,999 க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஓஜாய் ஸ்மார்ட்வாட்ச் போன் ஆன்லைன் விற்பனைதளமான ப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது.
‘ஸ்மார்ட் வாட்ச்களின் தேவை அதிகரித்து கொண்டு வருகிற நிலையில் இந்தாண்டு அதன் தேவை இரட்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சம் யுனிட்கள் வரை இது விற்பனை செய்யப்படலாம்' என கவுன்டர்பாயிண்ட் தொழிநுட்ப சந்தை ஆய்வுக்கூடத்தின் ரிசர்ச் இயங்குநர் நீல் ஷா கூறினார்.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மலேசியா, பிலிப்பையின்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்