மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராகுல் சர்மாவால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்தான் இந்த ரெவோல்ட் இன்டெலிகார்ப் (Revolt Intellicorp). இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் இந்த 'ரெவோல்ட் RV 400' பைக், ரிமோட் ஸ்டார்ட் வசதி, நிகழ்நேர தகவல் மற்றும் கண்டறிதல், ஜியோ-ஃபென்சிங், பைக் லொக்கேட்டர், மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 15A சார்ஜர் கொண்ட இந்த பைக்கை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் தேவைப்படும். இந்த பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பைக்கிற்கான முன்பதிவு ஆன்லைனில் ஜூன் 25-ல் இந்த நிறுவனத்தின் தளத்தில் துவங்கவுள்ளது. டெல்லியை செர்ந்தவர்கள்அமேசான் நிறுவனத்தின் தளத்தில் நடக்க இருக்கும் இந்த முன்பதிவில் 1,000 ரூபாய் செலுத்தி, இந்த பைக்கிற்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். இன்னும் நான்கு மாதங்களில் இதன் விற்பனை நிலையங்களை டெல்லி, பூனே, ஹைத்ராபாத், சென்னை, நாக்பூர், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நிறுவவுள்ளது ரெவோல்ட் நிறுவனம். இன்னும் விலை அறிவிக்கப்படாத இந்த பைக் சிவப்பு (Rebel Red) மற்றும் கருப்பு (Cosmic Black) ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹரியானாவில் நிறுவப்பட்டுள்ள இந்த 'ரெவோல்ட் RV 400' எலக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி நிலையம், ஆண்டுக்கு 1.2 லட்சம் பைக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு 125 சிசி பைக்கின் திறனை கொண்டுள்ளது இந்த RV 400 என்கிறது ரெவோல்ட் நிறுவனம். டிஸ்க் பிரேக், உலோக கலப்ப சக்கரங்கள், பின்புறத்தில் மோனோஷாக் என பல அம்சங்களை கொண்டுள்ள இந்த் பைக்கின் உச்ச வேகம் எவ்வளவு தெரியுமா, இந்த வாகனம் ஒரு மணி நேரத்திற்கு 85 கிமீ வரை செல்லும் உச்ச வேகத்தை கொண்டுள்ளது. RV 400-ன் இந்த திறன், பெட்ரோல் பைக்கை உபயோகிப்போரின் பார்வையையும் இதன் பக்கம் திருப்பியுள்ளது. இணையம் சார்ந்த வசதிகளை பயன்படுத்த இந்த பைக் ஒரு 4G சிம் இணைக்கப்பட்டே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பைக் சார்ந்த செயலி விரைவில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களின் கதவை தட்டவுள்ளது.
இந்த ரிவால்ட் RV 400 பைக்கில் லித்தியம்- அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் என்று ARAI சான்றிதழ் கொடுத்துள்ளது. பேட்டரியை வண்டியில் இருந்து தனியாக பிரித்து மாட்டிக்கொள்ளலாம். இந்த பேட்டரியை கழட்டி மாற்றுவதை நொடிகளில் செய்துவிடலாம். இதனால், ஒரே நேரத்தில் பல பேட்டரிகளை பயன்படுத்துவதில் கடினம் இருக்காது.
RV 400-ல் மூன்று வகை பயண முறை கொடுக்கப்பட்டுள்ளது- ஈகோ, சிட்டி, ஸ்போர்ட்+. நேரத்துக்கு ஏற்றாற் போல இந்த வகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது பேட்டரி திறனை அதிகரிக்க உதவும்.
இந்த வாகனம் குறித்து பேசிகையில், 'இந்திய இரு சக்கர வாகனத்துறையில், இன்று ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்கிறார் ராகுல் சர்மா.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்