கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு, லைவ் ரிலே (Live Relay). பேச்சுத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு, ப்ராஜெக்ட் யுபோனியா (Project Euphonia).
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு தங்களில் உரையாடல்களை மேற்கொள்ள உதவும் லைவ் ரிலே
2019 ஆம் ஆண்டிற்கான கூகுள் I/O திருவிழா (Google I/O 2019) கடந்த மே 7 ஆம் தேதி துவங்கியது. மே 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் முதல் நாளான நேற்று, கூகுள் நிறுவனம் தன் பல தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகளை வெளியிட்டது. அதில் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ், அண்ட்ராய்ட் Q பீடா 3, பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்கள், கூகுள் மேப்பில் இன்கொக்னிடோ (INCOGNITO) வசதி, கூகுள் லென்ஸ்-இல் பல மேம்பாடுகள் என பல முக்கிய அறிவிப்புகள் அடங்கும். அதன் இரண்டாம் நாளான இன்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டு தன் வாடிக்கையாளர்களை மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி இன்றைக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் அதிகம் பேசப்பட்டவை மொபல்போன் சார்ந்து வெளியிடப்பட்ட லைவ் ரிலே (Live Relay) மற்றும் ப்ராஜெக்ட் யுபோனியா (Project Euphonia) அறிவிப்புகள்தான். கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கும், பேச்சுத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கும் என உருவாக்கப்பட்டதுதான் இந்த இரு கண்டுபிடிப்புகளும்.
லைவ் ரிலே (Live Relay)
லைவ் ரிலே என்னும் தொழில்நுட்பம் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கென்றே, உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். ஒருவருடன் தொலைபேசி அழைப்பின் வாயிலாக பேசும்பொழுது, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு தங்களில் உரையாடல்களை மேற்கொள்ள சற்றே கடினமாக இருக்கும். ஆனால் இனி அந்த பிரச்னைகளைப் போக்க உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த லைவ் ரிலே. இந்த லைவ் ரிலே தொழில்நுட்பம் ஒருவரது மொபைல்போனில் என்ன செய்யுமென்றால், அவர் தொலைபேசி அழைப்பை பேசிக்கொண்டிருக்கும்போது, எதிரில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்து அதனை எழுத்து வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் திரையிடும். மேலும் அதனை படித்துவிட்டு நீங்கள் பதிலலிக்க உங்களுக்கு இரண்டு வழிகளை அளிக்கிறது இந்த தொழில்நுட்பம். ஒன்று, அந்த தொழில்நுட்பமே பரிந்துரைக்கும் வார்த்தைகளை தேர்வு செய்து பதிலலிக்கலாம். அல்லது நாமாகவே பதிலை டைப் செய்து அனுப்பலாம். நாம் அளிக்கும் பதில் மீண்டும் ஒலி வடிவில் மாற்றப்பட்டு, நம் எதிரில் பேசக்கூடியவருக்கு சென்றடையும்.
இந்த தொழில்நுட்பம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், அவர்களுடன் மற்றவர்கள் தொலைபேசி அழைப்புகள் பேச எளிதான வண்ணம் அமையும். அவர்கள் மட்டுமின்றி, இந்த தொழில்நுட்பம், மேலும் பலருக்கு உதவிகரமாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுத்த பேச விருப்பம் இல்லையென்றால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், நீங்கள் ஒரு முக்கியமான மீட்டிங்கில் உள்ளீர்கள், ஆனால் உங்களுக்கு வருகின்ற அழைப்பிற்கு பதிலலிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தீர்களென்றால், இந்த லைவ் ரிலே உதவும்.
இந்த லைவ் ரிலே தொழில்நுட்பம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த ஒரு இன்டர்நெட் டேட்டாவை செலவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் வசதி தேவைப்படாது. மேலும், உங்களுக்கு எதிரில் பேசுபவர் ஒரு லேண்டுலைன் போனை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றாலும், இந்த லைவ் ரிலேயை பயன்படுத்திக்கொள்ளலாம். வருங்காலத்தில், இதனுடன், நிகழ்-நேர மொழிபெயர்ப்பு வசதியையும் கூகுள் நிறுவனம் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இணைத்தால், இந்த லைவ் ரிலே, இன்னும் பலருக்கு உதவியாக இருக்கும்.
ப்ராஜெக்ட் யுபோனியா (Project Euphonia)
தற்போது உள்ள தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. தற்போதெல்லாம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஏதாவது தேட வேண்டுமென்றாலோ, ஏதாவது பாடல் இசைக்க வேண்டுமென்றாலோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எதாவது ஒரு செயலியை இயக்க வேண்டுமென்றாலோ, உங்கள் கைகளை அசைத்து, உங்கள் ஸ்மார்ட்போன்களை எடுத்து, இவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வாயால் என்ன செய்ய வேண்டும் என்று உச்சரித்தாலே போதும், ஸ்மார்ட்போன் அதை செய்துவிடும். கூகுள் அசிஸ்டன்ட், எனும் கூகுளின் மென்பொருள்தான் அதற்கு உதவியாக இருக்கிறது. ஆனால் பேச்சுத்திறனில் குறைபாடுள்ளவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான் ப்ராஜெக்ட் யுபோனியா.
இந்த ப்ராஜெக்ட், முக்கியமாக எதில் கவனம் செலுத்தியிருக்கிறது என்றால், அவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்துவது தவிர்த்து, அவர்களின் பேச்சு மற்றும் சைகைகளை கவனித்து, அதற்கு பதிலலிக்கும் வண்ணம் தன் செயலியை மேம்படுத்த உள்ளது. இதற்காக, அப்படி பாதிக்கப்பட்டவர்களின் ஓசைகள் மற்றும் சைகைகளை உள்வாங்கி அதனை புரிந்துகொள்ள, தன் AI-க்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது கூகுள் நிறுவனம். இதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து இவ்வாரு பாதிக்கப்பட்டவர்களின் ஓசை மாதிரிகளை சேகரித்த வண்ணம் உள்ளது இந்த நிறுவனம். அந்த மாதிரிகளை தன் AI-களுக்கு அளித்து அதனை புரிந்துகொள்ள வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த சேவையும் நமது மொபைல்போன்களின் கதவுகளை தட்டும். இந்த செயலை கூகுள் நிறுவனம் ALS சிகிச்சை மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.
முன்னதாக நடந்த இந்த நிறுவனத்தின் ஆண்டு மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த லைவ் ட்ரென்ஸ்கிரிப் (Live Transcribe) மற்றும் சவுண்டு ஆம்ப்ளிபயர் (Sound Amplifier) ஆகிய செயலிகளை பற்றி பேசப்பட்டிருந்தது. அதில் லைவ் ட்ரென்ஸ்கிரிப் செயலி ஒலி வடிவில் உள்ளதை எழுத்து வடிவில் மாற்றித்தரும் மற்றும் சவுண்டு ஆம்ப்ளிபயர் செயலி, ஒலியின் ஒலி அளவை கூட்டி, ஒலியை தெளிவுபடுத்தி வெளியிடும். இந்த இரு செயலிகளும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Next-Gen Xbox Will Reportedly Run Windows With a TV-Optimised Interface on Top, Support Steam