இந்த ஆண்டு மட்டும் இப்படி பேஸ்புக் நிறுவனப் பக்கங்கள் முடங்குவது மூன்றாவது முறையாகும்.
பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள், நேற்று உலகின் பல இடங்களில் முடங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இப்படி பேஸ்புக் நிறுவனப் பக்கங்கள் முடங்குவது மூன்றாவது முறையாகும்.
நேற்று காலை இந்தப் பிரச்னை நியூயார்க்கில்தான் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் காலை 6:30 மணி முதலே பேஸ்புக் நிறுவன பக்கங்கள் முடங்கியதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் இருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனம், ‘எங்கள் சமூக வலைதள பக்கங்களில் உள் நுழைவதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம்' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், இன்ஸ்டாகிராம் ஆப், இப்படித்தான் முடங்கியது. அப்போது வாட்ஸ்அப் பயனர்களும் எந்த வித செய்திகளைப் பெறவோ அனுப்பவோ முடியவில்லை. கடந்த மாதம் கூட பேஸ்புக், 12 மணி நேரம் முடங்கியது.
பேஸ்புக், தன்னிடம் இருக்கும் பயனர்களின் தகவல்களை சரிவர பாதுகாக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இப்படி அந்நிறுவன சமூக வலைதள பக்கங்கள் முடங்குவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் இந்தத் தவறுகள் குறித்து நெட்டிசன்கள் பலர் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்