தற்கால நவீன உறவுகளுக்கு பொருத்தம் பார்க்கும் மொபைல் டேட்டிங் செயலிகளான டிண்டர், பம்பிள் போன்றவற்றுக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கும் இவ்வசதியைத் தனது தளத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் தனது பணியாளர்களிடம் பயன்படுத்திப் பார்க்க அளித்து சோதித்து வருகிறது. செயலிகளைப் பற்றி ஆராயும் ஜேன் மன்ச்சுன் வாங் இச்சோதனை முயற்சி பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்புதிய மென்பொருளை அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களிடம் ஃபேஸ்புக் சோதித்து வருகிறது. "இதன் பயன்பாட்டு அனுபவம் பற்றி அறியவும், மென்பொருளில் உள்ள வழுக்களைக் கண்டறிந்து நீக்கவும், இடைமுகத்தின் குழப்பமான அம்சங்களை மேம்படுத்தவுமே இச்சோதனை நடைபெறுகிறது. சக பணியாளர்களை மெய்யாகவே வாழ்க்கைப் பொருத்தம் பார்த்து டேட் செய்ய அல்ல" என்று ஃபேஸ்புக் தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியின் திரைச்சொட்டு (screenshot) ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இச்சோதனைக்காகத் தங்களது உண்மையான தனிநபர் தகவல்கள், ரசனை விவரங்களைத் தர வேண்டாம். பொய்யான தரவுகளைப் பயன்படுத்துக" என்று அறிவுறுத்தியுள்ளதோடு; "சோதனை முடிந்து இம்மென்பொருள் வெளியாகும் முன் தாங்கள் அளித்த தகவல்களை அழித்துவிடுவோம்" என்றும் ஃபேஸ்புக் அதில் குறிப்பிட்டுள்ளது.
"இச்சோதனையில் பங்குபெறுவதும் மறுப்பதும் முழுக்க முழுக்க உங்களது விருப்பம் சார்ந்தது. இது நீங்கள் தற்போது ஆற்றிவரும் பணியில், வகித்து வரும் பொறுப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" எனவும் ஃபேஸ்புக் கூறியுள்ளதாக அத்திரைச்சொட்டின் மூலம் தெரிய வருகிறது.
இச்செய்தி ட்விட்டரில் வெளியானதும் ஃபேஸ்புக் இதனை உறுதிசெய்தது. எனினும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது.
கடந்த மே மாதம் நடந்த F-8 மென்பொருள் உருவாக்குநர் மாநாட்டில் இப்புதிய வசதி பற்றி ஃபேஸ்புக் தெரிவிக்கையில் இது ஒரு தனித்தியங்கும் டேட்டிங் ஆப்பாக இருக்காது என்பதாக அறிவித்திருந்தது.
"வெறுமனே சிறிது காலத்துக்கு ஆசைக்குக் கூடி இருந்துவிட்டுப் பிரியும் உறவுகளுக்கானதாக இல்லாமல், உண்மையான, நீண்ட-கால உறவுகளுக்கானதாக இது அமையும். பயனர்களது தகவல்கள், அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்குமாறு மனதில் கொண்டே இதை வடிவமைத்துள்ளோம். உங்களது கணக்குகளை உங்களது நண்பர்கள் காணமுடியாது. ஒருவருக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே அவரது புரொபைல் காண்பிக்கப்படும், பரிந்துரைக்கப்படும்" என்று தனது மைய உரையில் ஃபேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.
இம்மென்பொருளின் வடிவமைப்பு மாதிரி ஒன்றும் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டது. Unlocking என்ற தேர்வின் மூலம் ஒரு குறிபிட்ட க்ரூப்பில் உள்ளோர் அல்லது நிகழ்வில் பங்கேற்போருக்கு நமது புரொபல் தெரியும்படிச் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்