Photo Credit: Deep Instinct
ஒரு லேப்டாப், ஒரு சாதாரன லேப்டாப், வெறுமென விண்டோஸ் XP அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு லேப்டாப், வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்ட ஒரு லேப்டாப், உலகில் ரூ.7 லட்சம் கோடி வரையிலான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதா. 'குழப்பங்களில் நிலைத்தன்மை' ('The Persistence of Chaos') என பெயர் பெற்றிருக்கும் இந்த 'உலகின் மிக அபாயகரமான லேப்டாப்' அந்த திறனை கொண்டுள்ளது. மொத்தம் 6 அபாயகரமான வைரஸ்களை உட்புகுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப், இதுவரை உலக அளவில் ஏற்படுத்திய சேதம் மட்டும் ரூ.7 லட்சம் கோடி. இன்னும் அந்த சேதத்தின் அளவு தொடர்ந்து கொண்டுள்ளது.
மிகச்சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்று என கருதப்படும் இந்த லேப்டாப், 2008-ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் NC10 லேப்டாப். வெறும் 10.2 இன்ச் திரை, 14GB மெமரி, விண்டோஸ் XP அமைப்பில் செயல்படக்கூடிய இந்த லேப்டாப்பில் 6 அபாயகரமான வைரஸ்கள் உட்புகுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர், க்யோ ஓ டாங்(Guo O Dong). சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.
இந்த லேப்டாப்பில் உள்ள வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக, ஒரு அறையில் தனித்து வைக்கப்படுள்ள இந்த லேப்டாப், மேலும் வைரஸை பரப்பி எந்த சேதத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த முயற்சி. இதை தாண்டி, அந்த லேப்டாப்புடன் யாரேனும் தொடர்பை ஏற்படுத்தினால், அவர்கள் சந்திக்கும் விளைவு மிகவும் கொடியதாக இருக்கும்.
இப்படியான நிலையில் இருக்க, இந்த லேப்டாப் ஏலத்தில் விடப்பட்டது. ரூ.8.35 கோடி மதிப்பு பெற்ற இந்த லேப்டாப்பின் ஏலம், கடந்த மே 27-ஆம் தேதி வரை இணையத்தில் தொடரப்பட்டது. அந்த ஏலத்தின் முடிவுகள், இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கலைப்பொருள், இதனை உருவாக்கிய கலைஞருக்கு 9.07 கோடியை பெற்றுத்தந்துள்ளது. இந்த ஏலத்தின் முடிவில், வெறும் வின்டோஸ் XP அமைப்பில் செயல்படக்கூடிய இந்த 10.5-இன்ச் சாம்சங் லேப்டாப் ரூபாய் 9.07 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த லேப்டாப்பில் உள்ள வைரஸ்களின் தாக்கம் என்பது இந்த அளவு மிக சிறியதாக இருந்தது இல்லை. மொத்தம் ஆறு விதமான வைரஸ்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப். ஐ லவ் யூ (ILOVEYOU), மை டூம் (MyDoom), சோ பிக் (SoBig), வான்ன கிரை (WannaCry), டார்க் டக்கீலா (Dark Tequila), ப்ளாக் எனர்ஜி (BlackEnergy), இவை தான் அந்த ஆறு வைரஸ்கள். மிகவும் அழகான பெயர்களை கொண்ட இந்த ஆறு வைரஸ்களின் தாக்கம் என்பது அழகானதாக இருக்கவில்லை. இதுவரை உலகில் ரூ.7 லட்சம் கோடி வரையிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்களின் கூட்டணி.
இவற்றின் தாக்கம் என்பது, ஐ லவ் யூ (ILOVEYOU) 38 ஆயிரம் கோடி, மை டூம் (MyDoom) 2.64 லட்சம் கோடி, சோ பிக் (SoBig) 2.57 லட்சம் கோடி, வான்ன கிரை (WannaCry) 28 ஆயிரம் கோடி என இந்த வைரஸ்கள் ஏற்படுத்திய சேதம், பல ஆயிரம் கோடிகளில் இருந்து, லட்சம் கோடி வரை நீள்கிறது. தொழில்நுட்ப உலகை கடந்து இதில் சில வைரஸ்கள் மக்களை நேரடியாக தாக்கியுள்ளது. வான்ன கிரை (WannaCry) வைரஸ், பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறையை ஒரு சுழற்று சுழற்றி 700 கோடிவரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வைரஸ் 2 லட்சம் பேரை நேரடியாக தாக்கியுள்ளது.
இந்த வைரஸ் எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாத வகையில், தனித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் தனித்து வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப், எந்த விதமான இணைய சேவையுடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாது அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை ஏலத்தில் பெற்றவருக்கு இந்த லேப்டாப்பை ஒப்படைக்கும் முன்பு, இதன் இணைய தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டு தான் வழங்கப்படும் என்கிறார், இதனை உருவாக்கிய டெக் வல்லுனர்.
இது குறித்து க்யோ ஓ டாங்(Guo O Dong) கூறுகையில், "நாம் கணினி மற்றும் மென்பொருள் உலகில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை பாதிக்காது என்ற மாயையில் இருக்கிறோம். ஆனால் கேட்பதற்கு வேடிக்கையாகவும், நகைப்பாகவும் இருக்கும் இந்த வைரஸ்கள், அந்த மாயையை உடைத்து, மென்பொருள் உலகமும், நிஜ உலகமும் வெவ்வேறு இல்லை என்பதை நிருபித்துள்ளது. இவை மென்பொருள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் மக்களை நேரடியாக தாக்கியுள்ளது", என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்