க்ரூப்பான் நிறுவனம் ஐபிஎம்மின் நான்கு இ-வணிகக் கண்டுபிடிப்புகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி ஐபிஎம்முக்கு க்ரூப்பான் நிறுவனம் 82.5 மில்லியன் டாலர் (562 கோடி ரூபா) வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 45,000க்கும் அதிகமான காப்புரிமைகளைச் சொந்தமாகக் கொண்ட நிறுவனம். தனது அறிவுசார் சொத்துரிமைகளுக்கு உரிமம் வழங்கியதில் மட்டும் கடந்த ஆண்டு அது 8200 கோடி ரூபாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தீர்ப்பு அவர்களுக்கு பெரும் உந்துதலை அளித்துள்ளது. முன்னதாக க்ரூப்பான் தனது ஆன்லைன் கூப்பன் வணிகத்தினை ஐபிஎம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் முறைகேடாக கட்டமைப்பதாகக் கூறி ஐபிஎம் நிறுவனம் 1150 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது.
“ஆண்டுக்கு ஆறு பில்லியன் டாலர்களை நாங்கள் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்காக முதலீடு செய்கிறோம். எங்கள் கண்டுபிடிப்புகளைக் காக்க நாங்கள் காப்புரிமைகளை நம்பியே உள்ளோம்” என்று ஐபிஎம் செய்தித்தொடர்பாளர் இத்தீர்ப்பு குறித்து கூறியுள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தங்களுக்கு இருக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக க்ரூப்பான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். “ஐபிஎம்மின் காப்புரிமைகளை நாங்கள் மீறவில்லை என்பதை இப்போதும் நம்புகிறோம். அக்காப்புரிமைகளுக்கு உரிய விலையைவிட பன்மடங்கு எங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மதிப்பு இருக்கிறதா என்பதே ஐயம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இவ்வழக்கின் விசாரணையில், “அமேசான், கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், லின்க்டின் போன்ற பல பெரிய நிறுவனங்கள் எங்களது காப்புரிமைகளைப் பயன்படுத்த 20 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை கட்டியுள்ளன. க்ரூப்பான் மட்டுமே விதிகளை மீறி எங்கள் அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளது” என்று ஐபிஎம் தரப்பில் வாதாடப்பட்டது.
காப்புரிமை அமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களால் நிறுவனங்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்றும்; இதனால் பல நிறுவனங்கள் ஊக்கமடைந்து சட்டவிரோதமாகக் காப்புரிமைகளைப் பயன்படுத்துகின்றன என்றும் ஐபிஎம் வழக்கறிஞர் தெரிவித்தார். இவ்வழக்கில் வெற்றி கிடைத்தாலும் இதற்கு பல மில்லியன் செலவும் காலமும் பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி ஆன்லைன் விளம்பரம் & மார்க்கெட்டிங் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்