ஆதார் விர்ச்சுவல் (மெய்நிகர்) ஐடி முறை நடைமுறைக்கு வந்ததாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விர்ச்சுவல் ஐடியின் 16 இலக்க எண்ணை ஆதார் எண்ணுக்கு பதிலாக கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் இந்த 16 இலக்க எண் மாறிக் கொண்டே இருக்கும். இதனால் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விர்ச்சுவல் ஐடியை ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் விர்ச்சுவல் ஐடியை ஆதார சான்றாக ஏற்றுக் கொள்ளும் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் சேவைக்கு,ஆதாரச் சான்றாக, ஆதார் எண்ணை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற, அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் தற்போது விர்ச்சுவல் ஐடியை ஆதாரச் சான்றாக பெற வேண்டும். ஆதார் எண்ணை சான்றாக பெற அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் இரு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று லோக்கல் மற்றொன்று குளோபல்.
குளோபல் என்ற வரையரைக்குள் வரும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளரின் அனைத்து கே.ஒய்.சி தகவலும் கொடுக்கப்படும். லோக்கல் வரையரையில் வரும் நிறுவனங்களுக்கு கே.ஒய்.சியில் ஒரு சில தகவல்கள் மட்டும் தான் தரப்படும். தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் லோக்கல் நிறுவனங்களுக்கு கீழ் வரும்.
நாளை முதல் விர்ச்சுவல் ஐடி தொழில்நுட்பத்தை நடமுறைப்படுத்தாத தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதமாக, ஒவ்வொரு ஆதாரச் சான்று பரிவர்த்தனையிலும் 0.20 ரூபாய் வசூலிக்கப்படும் என்று ஆதார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் ஜூலை 31-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அபராதத் தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளுக்கு இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
121 கோடி மக்கள் பயன்படுத்தும் ஆதார் எண்ணை, சான்றாக பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்களில் இந்த செயல்முறை, நிறுவனத்தின் ஊழியர்களால் மிகுந்த பாதுகாப்போடு செய்யப்படுகிறது. ஆனால், சில நிறுவனங்கள் ஏஜென்ட்கள் மூலம் இதை செயல்படுத்துகின்றன. அந்த ஏஜென்ட்கள் வேறு தொழிலும் ஈடுபட்டிருப்பார்கள். ஆகையால் பாதுகாப்பு கருதி இந்த விர்ச்சுவல் ஐடி கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது ஆதார் ஆணையம்.
இதுபோல மேலும், மக்களின் தகவல்களை காக்க பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பாண்டே கூறியுள்ளார். மேலும், நிறுவனங்கள் ஆதார் எண் மற்றும் விர்ச்சுவல் எண் ஆகியவற்றை சான்றாக பெறும் வகையில் தங்களின் மென்பொருளில் உடனைடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விர்ச்சுவல் ஐடி முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், இனி ஆதார் எண்ணை நிறுவனங்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறையும் புதியதாக ஒரு விர்ச்சுவல் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். புதிய ஐடி உருவானதும், பழைய ஐடி தானாகவே ரத்தாகிவிடும். மக்களின் தகவல்களை பாதுகாக்க இது ஒரு முக்கிய நடவடிக்கயாக பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்