விரைவில் ஒன்ப்ளஸ் டிவிக்கள் அறிமுகமாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டே ஒன்ப்ளஸ் நிறுவனம் ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தது. அதன்பின் இது குறித்து எந்த அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தற்போது இந்த நிறுவனம் 'ஒன்ப்ளஸ்' என்ற பெயரிலே பிரீமியம் டிவிக்களை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை, ஒன்ப்ளஸ் நிறுவனம் டிவிக்களை அறிமுகப்படுத்தினால் தற்போது இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகமாகி மக்களிடையே மிகுத்த வரவேற்பை பெற்றுள்ள குறைந்த விலையை கொண்ட 'சியோமி ஸ்மார்ட் டிவி' சந்தைக்கு ஆபத்தாக அமையலாம்.
தொழில்நுட்ப துறையில் பல விவரங்களை முன்கூட்டியே வெளியிடும் தொழில்நுட்ப வல்லுனரான இஷான் அகர்வால், இது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து இவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஒன்ப்ளஸ் நிறுவனம் விரைவில் டிவிக்களை அறிமுகப்படுத்தவுள்ளது எனக் கூறியுள்ளார். இது இந்தியாவை மையமாக வைத்து அறிமுகமாகவுள்ளதா இல்லை உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாகவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒன்ப்ளஸ் தலைமை நிர்வாக அதிகாரியான பெடே லா, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் டிவி தயாரிப்பு குறித்த தகவலை வெளியிட்டிருந்தார். அவர் ஒன்ப்ளஸ் நிறுவனம் பிரீமியம் டிவிக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இவர் ஊடகங்களுக்கு அளித்த ஒரு நேர்காணலில்,"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், எங்கள் கற்பனை அளவற்றது, நாங்கள் வருங்காலம் நோக்கிய பயணத்தில் உள்ளோம்." என்று அவர் கூறியிருந்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்