Photo Credit: Daniel Smith/Disney
சென்ற வாரம், டிஸ்னி நிறுவனம் உலக அளவில் 'அலாதீன்' படத்தை திரைக்கு வெளியிட்டது. இந்த திரைப்படம் முதல் வாரத்தில், உலக அளவில் ரூ.1,437 கோடியை வசூல் செய்துள்ளது. முன்னதாக டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட எம்மா வாட்சனின் 'பியூட்டி அண்ட் தீ பீஸ்ட்' (Beauty and the Beast) (ரூ.2,434 கோடி), 2016ஆம் ஆண்டு வெளியான 'தீ ஜங்கில் புக்' (The Jungle Book) (ரூ.1,683 கோடி) மற்றும் அலைஸ் இன் வண்டர்லேண்ட் (Alice in Wonderland) (ரூ.1,461 கோடி) ஆகிய படங்களை தொடர்ந்து அதிக வசூல் செய்த நான்காவது டிஸ்னி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கய் ரிச்சி (Guy Ritchie) இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த அலாதீன் திரைப்படம் வசூல் செய்த ரூ.1,437 கோடியில், அதிகபடியாக தனது சொந்த மார்க்கெட்டான அமெரிக்காவில் ரூ.598 கோடியை வசூல் செய்தது. அதற்கு அடுத்தபடியாக சீனா(130 கோடி), மெக்சிகோ(ரூ.63 கோடி), பிரிட்டன் (ரூ.58 கோடி), இத்தாலி (46 கோடி) என தனது வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறது. டிஸ்னி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்தியாவின் முதல் வாரத்தில், அலாதீன் திரைப்படம் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
ரூ.1,250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், அமெரிக்காவில் முதல் வாரத்தில் ரூ.729-764 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படம் இன்னும் ஜப்பானில் வெளியாகாத நிலையில், வருகின்ற ஜூன் 7-ஆம் தேதி அலாதீன் அங்கு திரையிடப்படவுள்ளது. அங்கும் இந்த படம் ஒரு வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் இப்படி வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்க, கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இன்னும் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படமான அவெஞ்செர்ஸ் 'எண்ட் கேம்' சென்ற வாரத்தில் மட்டும், ரூ.222.85 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை சேர்த்து இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.18,584 கோடியை எட்டியுள்ளது. உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் சாதனையை முறியடிக்க, இந்த படத்திற்கு இன்னும் ரூ.770.62 கோடி வசூல் தேவைப்படுகிறது.
இவற்றிற்கு இடையில், போகெமான்: டிடெக்டிவ் பிக்கசூ (Pokemon: Detective Pikachu), தனது மூன்றாவது வாரத்தில் ரூ.261 கோடி வசூல் செய்து, உலக அளவில் ரூ.2,450 கோடி மொத்த வசூல் என்ற இலக்கை எட்டியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்