சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது டிக்டாக் வணிகத்தில் முதலீடு செய்யும்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) மீண்டும் இந்தியாவில் காலூன்ற முயற்சித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், அப்போது எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த செய்திக்கு ரிலையன்ஸ் தரப்பிலும், டிக்டாக் தரப்பிலும் எந்த மறுப்பும் வரவில்லை.
சீனாவுடனான எல்லை பிரச்னை பதட்டங்களுக்குப் பின்னர் , "இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" அச்சுறுத்தியதற்காக இந்திய அரசாங்கம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவை தளமாகக் கொண்ட மெசேஜிங் ஆப், வீ சாட் மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தத் தடை45 நாளில் அமலாகிறது.
இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனமும், டுவிட்டர் நிறுவனமும் டிக்டாக்கை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் இந்த முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்