சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சில நாட்களுக்கு முன்னர் டிக் டாக் செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் நம்பர் 1 செயலியாக டிக் டாக் உருவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்கு டிக் டாக் நிறுவனத்தின் ஓர் யுக்தியும் காரணம். டிக் டாக் நிறுவனம், #ReturnofTikTok ஹாஷ்-டேக்கை சமூக வலைதளங்களில் பகிர்பவர்களில் 3 பேருக்கு தினமும் தலா ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசளிப்பதாக கூறியுள்ளது. அதுவும் இந்த திடீர் ஏற்றத்துக்கு வித்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் என்ட்ரி கொடுத்தது குறித்து டிக் டாக் (இந்தியா)-வின் சுமதேஸ் ராஜகோபால், “இந்தியாவில் எங்கள் செயலியை 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் எங்களின் நன்றி. உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறோம். டிக் டாக் மூலம் மக்களுடன் நாங்கள் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம். எங்கள் செயலியை பயன்படுத்துவோர்க்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தொடர்ந்து பணி செய்வோம்” என்று கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்ற மாதம், டிக் டாக் செயலியை தடை செய்தது. தடை உத்தரவின் போது நீதிமன்றம், “ஆபாச வீடியோக்கள் இருப்பதால் செயலியை தற்காலிகமாகத் தடை செய்கிறோம்” என்று கூறியது.
ஆனால் தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது, டிக் டாக் நிறுவனம், “செயலியை அனைவரும் பயன்படுத்தும்படி பாதுகாப்பை அதிகரிப்போம்” என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிமன்றம், பல நிபந்தனைகளுடன் தடை உத்தரவை நீக்கியது.
இடைக்கால தடை உத்தரவால் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.
மே 1 ஆம் தேதி முதல் மீண்டும் டிக் டாக் செயலி தரவிறக்கம் செய்ய கிடைத்தது. அப்போதில் இருந்து அந்நிறுவனம் சார்பில், ஒரு ஸ்பெஷல் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மீண்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலை, தங்களது சமூக வலைதளங்களில் பகிரும் 3 பேருக்கு தினமும் தலா 1 லட்ச ரூபாய் பரிசளிப்போம் என்று தெரிவித்தது. மே 16 ஆம் தேதி வரை இந்த ஸ்பெஷல் விளம்பரம் தொடரும் என்று டிக் டாக் நிறுவம் கூறியுள்ளது.
சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனம்தான் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
IANS தகவல்களுடன் எழுதப்பட்டது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்