ஆப்பிள் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ராஜா விஜயராமன் என்பவருக்கு சிறந்த செயலி வடிவமைப்பாளருக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் நடதப்பட்ட WWDC விழாவில் தனது `Calzy 3' இந்த விருதை வாங்கினார் ராஜா.
சென்னையைப் பூர்விமாகக் கொண்டவர் ராஜா விஜயராமன். இவர் `கால்சி 3' (calzy 3) என்ற செயலியை சில ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைத்தார். இந்த செயலியின் மூலம் மிகவும் அதி நவீன வசதி கொண்ட கால்குலேஷன் செய்ய முடியும். iOS தொழில்நுட்பங்களை வைத்து மல்டி- டாஸ்கிங், ஃபேஸ் ஐடி, டச் ஐடி போன்ற வசதிகை இந்த செயலி தர வல்லது.
இந்த செயலி 150 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மேன்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு ஆப்பிள் நிறுவனம், 2018 ஆம் ஆண்டுக்கான WWDC விழாவில் சிறந்த செயலி வடிவமைப்புக்கான விருதை ராஜாவுக்கு வழங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ள இந்த விருது குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ராஜா, `முதன்முறையாக அமெரிக்காவில் நடக்கும் WWDC நிகழ்ச்சிக்கு இப்போது தான் நான் செல்கிறேன். இந்த விழாவில் எனக்கு விருது கொடுக்கப்படும் என்றெல்லாம் நான் நினைத்து செல்லவில்லை. நான் ஒரு செயலி வடிவமைப்பாளர் என்பதால் ஆப்பிள் நிறுவனம் என்னை அழைக்கிறது என்று நினைத்துக் கொண்டு சென்றேன்' என்றார் குழந்தைத்தனத்துடன்.
அவர் தொடர்ந்து தனது பின்புலத்தைப் பற்றி பேசுகையில், `எனக்கு விஷுவல் மீடியா அறிமுகம் இருந்தது. அதில் தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். குறிப்பாக, இரண்டு திரைப்படங்களுக்குத் தேவையான VFX காட்சிகளை வடிவமைக்கும் குழுவில் இருந்தேன். அப்போது தான், நான் செயலி வடிவமைப்பது குறித்து தெரிந்த கொண்டேன். இது 2010 ஆம் ஆண்டு. அப்போது ஐபோன் 3GS போனை வாங்கினேன். அதன் பிறகு, 99 டாலர்கள் கொடுத்து ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு எப்படி செயலி வடிவமைப்பது என்பதற்கு ஒரு கோர்ஸ் எடுத்து கற்றுக் கொண்டேன். முன்னர் நோக்கியா போன் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆப்பிள் போன்களுக்கு மாறியது, என்னை செயலி வடிவமைப்பாளராக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது' என்றார்.
மேலும் அவர் கால்சி 3 செயலி குறித்து, `2014 ஆம் ஆண்டு இந்த செயலியை முதன்முதலாக வடிவமைத்து வெளியிட்டேன். அதன் பிறகு இரண்டு அப்டேட்களை விட்டுள்ளேன். மீண்டும் சில விஷயங்களைத் திருத்தி அப்டேட் விடுமாறு பலர் கேட்கின்றனர். ஆனால், இந்த ஆப் மிக சாதரணமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அந்த சிம்பிலிசிட்டியை செயலி இழக்க கூடாது என்று நினைக்கிறேன். அப்படி, அந்தத் தன்மை இருக்கும் வகையில் தான் வருங்கால அப்டேட்களையும் வெளியிடுவேன். உண்மையில், செயலியை வடிவமைத்து விட்டு அதை எப்படி சந்தையில் விற்பது என்று தெரியாமல் தான் இருந்தேன். அதேபோல, எனது செயலியில் விலை 1.99 அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில், 159 ரூபாய். நம் நாட்டில் இலவச செயலிகளே அதிகம் தரவிறக்கம் செய்யப்படுவதால், எனது செயலியின் வீச்சு குறைவு தான். அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எனது செயலியில் விற்பனை நன்றாக உள்ளது' என்றார் நம்பிக்கையுடன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்