ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு ஃபிஃபா காய்ச்சலை வரவழைத்திருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளை ரசிப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது. ஆனால், வெவ்வேறு நாடுகளில் நடக்கும் கால்பந்து போட்டிகளை காண செல்லும் ரசிகர்களுக்கு, உள்ளூர் வழித்தடங்களை கண்டறிந்து பயணிப்பது பெரும் சவால் தான்.
இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. பல நாடுகளில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் இதற்காக கூகுள் டிரான்ஸ்லேட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ரஷ்யாவில், 11 நகரங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. வெவ்வேறு மைதானங்களுக்கு செல்லவும், தங்கும் இடம், ஹோட்டல் போன்ற பகுதிகளைத் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளவும் ரசிகர்களுக்கு கூகுள் டிரான்ஸ்லேட்டர் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
“யுரேசியா பகுதிகளில் பயன்படுத்தப்படும் சிரிலிக் எழுத்துக்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனவே, கூகுள் டிராஸ்லேட்டர் மூலம் ரஷ்ய மக்கள் பேசுவதை புரிந்து கொள்கிறோம்” என்று பிரேசிலில் இருந்து 12,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்து வந்திருக்கும் கால்பந்து ரசிகர் கஸ்டாவோ என்பவர் தெரிவித்தார். இன்று நடைப்பெறும், பிரேசில் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியை காண அவர் வந்துள்ளார்.
சில வெளிநாட்டு ரசிகர்கள், ரஷ்ய மக்களிடம் தாங்கள் கூற வேண்டியதை டிரான்ஸ்லேட்டரில் பதிவு செய்து ரஷ்ய மொழியில் மாற்றி தகவல் பரிமாறி கொள்கின்றார்கள்.
கசான் பகுதிக்கு வந்துள்ள கால்பந்து ரசிகை திரிஷா பிலிப்பினோ, “விலாடிமிரில் இருந்த கடையில், டிராஸ்லேட்டர் மூலம் தகவல் பரிமாறி கொண்டு பொருட்களை வாங்கினேன்” என்கிறார்.
துல்லியமான மொழி பெயர்ப்பை கூகுள் டிரான்ஸ்லேட்டர் செய்வதில்லை என்றாலும், தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் பயன்படுவதை மறுக்க முடியாது. கொலம்பியா நாட்டில் இருந்து பயணித்து வந்த ஜூவன் டேவிட் என்ற கால்பந்து ரசிகர், “ரஷ்ய பெண்கள் மிகவும் அழகானவர்கள்” என்பதை டிரான்ஸ்லேட்டரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதற்கு, “வயதான பெண்கள் மிகவும் அழகானவர்கள்” என கூகுள் கூறியது என சிரித்து கொண்டே சொன்னார்.
குறிப்பாக, ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை பற்றி செய்து திரட்ட வந்த பத்திரிக்கையாளர்களுக்கும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் பெரிதும் பயன்படுகிறது.
ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் அந்தோனி கிரேய்ஸ்மான் உடனான பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த செய்தியாளர் கேள்வி கேட்க விரும்பினர். பிரஞ்சு மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியதால், டிரான்ஸ்லேட்டரில் மொழி பெயர்ப்பு செய்து, செய்தியாளர் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
ஃபிரான்ஸ் வீரர் கிரேய்ஸ்மான், சிரித்து கொண்டே ஸ்பானிஷ் மொழியில் பதில் கூற தொடங்கியவுடன், அடுத்தக் கேள்வியைக் கேட்குமாறு செய்தியாளரிடம் கூறிய அணி நிர்வாகிகள், தொடர்ந்து பதில் பேச விடாமல் கிரேய்ஸ்மானை தடுத்தது குறிப்பிடத் தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்