சர்வதேச அளவில் இரு வேறு சித்தாந்தங்களை கொண்ட மிகப்பெரும் பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளான சீனா-அமெரிக்கா இடையே சமீபத்தில் பனிப்போர் நடந்துவருகிறது. முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்கா, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும், அதன் அரசியல் குறித்தும் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, அமெரிக்காவின் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்தும் யு.எஸ் கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையத்தின் (US FCC) யுனிவர்சல் சர்வீஸ் ஃபண்டின் கீழ் சீனாவை சேர்ந்த இரு நிறுவனங்களும் சப்ளையர்களாக இருக்க தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நெட்வொர்க்குகளை பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எஃப்.சி.சி யின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹாவய் மற்றும் இசட்.டி.இ இந்த இரண்டு சீன நிறுவனங்களும் சப்ளையர்களாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலமாக மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களிடத்திலிருந்தும் தயாரிக்கப்பட்ட அல்லது அவர்களால் வழங்கப்பட்ட எந்தவொரு உபகரணங்களையும் பெறுவதில்லை என்கிற முடிவினை எஃப்.சி.சி எடுத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 62,676 கோடி வருவாய் இழப்பினை இந்நிறுவனங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.
“அமெரிக்காவின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் நமது 5 ஜி சேவைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இந்த இரு நிறுவனங்கள் மூலமாக இருக்கின்றது.“ என எஃப்.சி.சி தலைவர் அஜித் பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், "இரு நிறுவனங்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின் இராணுவ எந்திரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன, மேலும் இரு நிறுவனங்களும் சீனாவின் உளவுத்துறையுடன் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் சீன சட்டத்திற்கு உட்பட்டுள்ளன." என்றும், “உளவுத்துறை, மற்றும் பிற நாடுகளில் உள்ள தகவல் தொடர்பு சேவை வழங்குநர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் நடவடிக்கைகளையும் பணியகம் கணக்கில் எடுத்துக்கொண்டது. நெட்வொர்க் தகவல்களை சுரண்டுவதற்கும், எங்கள் முக்கியமான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை சமரசம் செய்வதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நாங்கள் அனுமதிக்க முடியாது, அனுமதிக்க மாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டோக் உட்பட சீனாவிலிருந்து 59 பயன்பாடுகளை தடை செய்ய இந்திய அரசு உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.