மார்ச் 20 முதல் மே 31 வரை காலாவதியான இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வாரன்ட்டியை ஜூன் 15-ம்தேதி வரை சாம்சங் நிறுவனம் நீட்டித்துள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதை கவனத்தில் கொண்டு சாம்சங் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இருப்பினும் சில பகுதிகளில் ஜூன் 30 வரை பொது முடக்கம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏப்ரல் மாதத்தில் சாம்சங் கொரோனா பிரச்னையால் தனது தயாரிப்புகளுக்கு உத்தரவாதத்தை மே 31 வரை நீட்டித்தது.
இதுதொடர்பாக சாம்சங் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தற்போதைய நிலைமையை மனதில் கொண்டு, எங்கள் தயாரிப்பு முழுமைக்கும் வாரன்ட்டியை ஜூன் 15, 2020 வரை நீட்டித்துள்ளோம். மார்ச் 20 முதல் 2020 மே 31 வரையிலான காலகட்டத்தில் உத்தரவாதத்தை காலாவதியான அனைத்து தயாரிப்புகளுக்கும் இது செல்லுபடியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புப்படி டிவி, ஸ்மார்ட்போன்கள், குளிர்சாதன பெட்டிகள், டேப்லெட்டுகள் மற்றும் சாம்சங்கின் பல நுகர்வோர் தயாரிப்புகள் நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி சலுகைக்கு தகுதியானவை.
தற்சமயம், கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள சாம்சங் சேவை மையங்கள் செயல்படவில்லை. நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் நிலைமை மற்றும் கடைகளை அணுகும் தன்மையைப் பொறுத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளைப் பெறலாம்.
சாம்சங் தனது தயாரிப்புகளுக்கு வாரன்ட்டியை நீட்டிப்பது கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். ஏப்ரல் மாதத்தில், சாம்சங் மே 31 வரை தனது தயாரிப்புகளுக்கான உத்தரவாதத்தை நீட்டித்தது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 30 வரை உத்தரவாதத்தை காலாவதியான தயாரிப்புகளுக்கு இது பொருந்தும்.
இதற்கிடையில், நிறுவனம் மீண்டும் செல்போன் விற்பனையைத் தொடங்கியுள்ளது.நேற்று இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 11 மற்றும் கேலக்ஸி எம் 01 என இரண்டு புதிய பட்ஜெட் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை ரூ. 10,999 ஆகவும், கேலக்ஸி எம் 01 விலை ரூ. 8,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்