2019-க்கான கூகுள் I/O திருவிழா(Google I/O 2019) கடந்த மே 7 ஆம் தேதி துவங்கியது. மே 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் முதல் நாளான நேற்று, கூகுள் நிறுவனம் தன் பல தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டுகளை வெளியிட்டது.
அதில் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ், அண்ட்ராய்ட் Q பீடா 3, கூகுள் மேப்பில் இன்கொக்னிடோ (INCOGNITO) வசதி, கூகுள் லென்ஸ்-இல் பல மேம்பாடுகள் என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒரு முக்கிய அறிவிப்புதான் இந்த கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL. இந்த நிறுவனம் சென்ற வருடம் கூகுள் பிக்சல் 3 மற்றும் 3 XL அதன் விலையோ ஐம்பதாயிரங்களில் உள்ளது.
அதை கருத்தில் கொண்டு சற்று குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்ட போன்கள்தான் இந்த கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரவுள்ளது, அதன் விலை என்ன, அதன் அம்சங்கள் என்னென்ன, வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்களின் விலை!
கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வருகின்ற மே 15-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்ற கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு மே 8-ஆம் தேதியான இன்றிலிருந்தே ஃப்ளிப்கார்ட்டில் துவங்க இருக்கிறது.
இந்த முன்பதிவு மதியம் 12:30 மணிக்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவுள்ள கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL, 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு ஓரே வகையில்தான் வெளிவரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் விற்பனை விலையை அறிவித்துள்ள கூகுள் நிறுவனம், கூகுள் பிக்சல் 3a ஸ்மார்ட்போனுக்கு ரூபாய் 39,999-ம் மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனுக்கு ரூபாய் 44,999 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் இந்த போன்கள் கருப்பு, வெள்ளை மற்றும் பர்ப்லிஷ் (வெள்ளை நிறத்தில் ஊதா நிறம் கலந்தது போன்ற வண்ணம்) ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் கூறியிருந்தது.
இந்தியா, அமெரிக்கா உட்பட 13 நாடுகளில் இந்த இரு ஸ்மார்ட்போன்களையும் வெளியிட உள்ளது இந்த நிறுவனம். அமேரிக்காவில் கூகுள் பிக்சல் 3a ஸ்மார்ட்போனின் விலை $399 (ரூபாய் 28,000) மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனின் விலை $479 (ரூபாய் 33,500) என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்!
ஓரே ஒரு சிம் கார்டை மட்டும் இணைத்துக்கொள்ளும் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) அமைப்பு கொண்டு இயங்குகிறது. ஒரு சிம் கார்ட் மட்டுமே இணைத்துக்கொள்ளும் வசதி இருந்தாலும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் இ-சிம் வாயிலாக தங்கள் சேவைகளுடன் இணைந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இ-சிம் என்பது என்னவென்றால், நாம் அன்றாடம் நம் மொபைல்போன்களில் பயன்படுத்தும் ப்லாஸ்டிக் கார்டுகள் இல்லாமலேயே அந்த தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளில் இணைந்துகொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அந்த நிறுவனத்தின் AR எனப்படும் ஆகுமென்டெட் ரியாலிடி (Augmented Reality) வசதிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னேப்ட்ரேகன் 670 ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மூலம் இயங்குகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்டே வெளியாக உள்ளது. கூகுள் பிக்சல் 3a 5.7-இன்ச் FHD+ திரை, 1080x2220 என்ற பிக்சல்கள் கொண்ட திரை மற்றும் 18.5:9 என்ற திரை விகிதத்தில் வெளியாகவுள்ளது. அதே நேரத்தில் கூகுள் பிக்சல் 3a XL 6-இன்ச் FHD+ திரை, 1080x2160 என்ற பிக்சல்கள் கொண்ட திரை மற்றும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு வெளியாகவுள்ளது. பிக்சல் 3-ல் இருப்பது போன்று கண்ணாடி போல் இல்லாமல், இந்த ஸ்மார்ட்போன்களின் உடல் பகுதி பாலிகார்பனேட்டால்(Polycarbonate) தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இந்த ஸ்மார்ட்போன்களில் பேசப்படவேண்டிய முக்கியமான அம்சம், கேமரா. பின்புறம் மற்றும் முன்புறம் என இருபுறங்களிலும் ஒரே ஒரு கேமராவை வைத்தே இந்த இரு ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
பின்புறம் 12.2MP கேமராவும், முன்புறத்தில் 8MP கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு போன்களின் கேமராவும் நல்ல தரத்தில் ஒளி குறைவான இடங்களில் கூட நல்ல படங்களை எடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் இருபுறம் இருக்கும் கேமராக்களிலும் உள்ள பொர்ட்ரைட் (Portrait Mode) வசதி, படத்தின் ஆழத்தை நாமே சரி செய்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 3a 3,000mAh பேட்டரி அளவு கொண்டும், பிக்சல் 3a XL 3,700mAh பேட்டரி அளவு கொண்டும் உள்ளது. இதன் பேட்டரி, அதிகபட்சமாக 30 மணி நேரம் வரை நீடிக்கும் சக்தியுள்ளது. மேலும் இதன் 18-வாட் சார்ஜர், நீங்கள் இந்த போனை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 7 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை அளிக்கும். மேலும் இந்த மொபைல்போன்களில் 4G வசதி, வை-பை, ப்ளுடூத் v5.0, மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகள் உள்ளன.
151.3x70.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a, 147 கிராம் எடை கொண்டுள்ளது. அதே நேரம் 160.1x76.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a XL, 167 கிராம் எடை உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்