ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், மொபைல் போன்களுக்கென பிரத்யேக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பல மாத சோதனைக்குப் பின்னர் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 199 ரூபாய்க்கு இந்த மொபைல் பிளான், மூலம் போன்களுக்கு மட்டும் சப்ஸ்கிரிப்ஷன் பெற முடியும். எஸ்.டி தரத்தில் மட்டுமே இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வீடியோவைப் பார்க்க முடியும். நெட்ஃப்ளிக்ஸ், சாதரணமாக தனது மாதாந்திரக் கட்டணத்தை 499 ரூபாய் என வைத்துள்ளது. அதை ஒப்பிடும்போது, ரூ.199 என்பது மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், பலர் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொபைல் பயனர்களை மட்டும் குறிவைத்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
இந்த ரூ.199 திட்டத்தைப் பெறுவதன் மூலம் டேப்லட் அல்லது மொபைல் போன்களில் ஒரு திரையில் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் தள வீடியோக்களைப் பார்க்க முடியும். டிவியில் இந்த பிளான் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் இணைப்பு கொடுக்க முடியாது.
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில்தான் மொபைல் மூலம் நெட்ஃப்ளிக்ஸைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால், இந்தத் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் முன்னணியில் இருக்கும் அமேசான் பிரைம் மற்றும் ஹாட் ஸ்டாருடன் நெட்ஃப்ளிக்ஸ் ஆக்ரோஷமாக போட்டியிட உள்ளது.
ஹாட்ஸ்டாரின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 299 ரூபாய் ஆகும். அமேசான் பிரைமின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 129 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள், அதிக நேரம் மொபைல் போன் மூலம் வீடியோக்கைப் பார்க்கின்றனர். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இந்த செயல் இந்தியாவில் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு ரூ.199 திட்டம் அமையும். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இதற்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து அடுத்தடுத்த பணிகளை செய்வோம்” என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் அஜெய் அரோரா கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்