தனது மெய்நிகர் உதவியாளரான அலெக்சாவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிமையாக்கும் வகையில் க்ளியோ ( #Cleo ) தொழில்நுட்பத்தை இந்தியமொழிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான். இது 2017 இன் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் அறிமுகமாகிவிட்டாலும் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மராட்டி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி ஆகியவற்றுக்கு இப்போதுதான் அறிமுகமாகிறது. ஆங்கிலத்தைப் போல மொழியை முற்றிலுமாக நம்மால் இப்போதைக்கு இதற்குக் கற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும், இந்திய மொழிகளை மெல்ல கற்றுக்கொள்ள இது பெரிதும் உதவும். உள்ளூர் மொழிகளில், உள்ளூர் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் ஆர்வம் கொண்ட மொழியியலாளர்களும் தகவல் அறிஞர்களும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதனால் ஆப்பிளின் சிரி என்னும் உதவியாளருக்குப் போட்டி அதிகரித்துள்ளது.
க்ளியோ திறன் மூலம் அலெக்சாவுடன் நாம் நமது உள்ளூர் மொழியில் அல்லது வட்டார வழக்கில் பேசலாம். இதன்மூலம் அம்மொழிகளின், மொழிவழக்குகளின் தன்மையை அலெக்சா அறிந்துகொள்ளும். அமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் மட்டுமின்றி பல மின்னணு சாதனங்களிலும் இவ்வசதி உள்ளது. க்ளியோ மூலம் உள்ளூர் மொழிகள் பற்றிய தகவல்கள், தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை அலெக்சாவை மேம்படுத்த உதவும். நமது உச்சரிப்புகள், சொல் தேர்வுகள் போன்றவற்றை நாம் சொல்லச் சொல்ல கிரகித்துக்கொள்ளும் அலெக்சா விரைவில் இதனைக்கொண்டு நமது மொழிகளில் பேசத் தொடங்கும்.
இந்தப் புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய நமது அமேசான் எக்கோ ஸ்பீக்கரிடம் “அலெக்ஸா, ஓப்பன் க்ளியோ” என்று குரலில் கட்டளையிட்டால் போதும். நாம் தமிழ், இந்தி, பஞ்சாபி என்று ஏதேனும் ஒரு மொழியைக் கூறி அதனைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம்.
இதன் பின்னர் ஒவ்வொரு சுற்றிலும் நமது மொழியில் சிலவற்றை எப்படிச் சொல்வது என்று அது நம்மிடம் கேட்கும். நாம் சாதாரணமாக நமது நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசுவது போலவே பேசி, சொற்கள், தொடர்களை அதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். போதும் என்று தோன்றும்போது அலெக்சாவிடம் நிறுத்தச் சொல்லிவிட்டு, பின்னர் தொடங்கலாம். நம்மை இதில் ஈடுபடுத்த தரவரிசைகள், விருதுகள் போன்ற அம்சங்களும் உண்டு.
இந்திய மொழிகளை அலெக்சாவுக்குக் கற்றுக்கொடுக்கும் முக்கியப் பணிகளை ஆராய்ச்சியாளர்கள்தாம் நிகழ்த்தவேண்டும் என்றாலும் நேரடியாக உள்ளூர் ஒலிப்பு முறைகள், சொல் தேர்வுகள் போன்றவற்றை மக்களிடம் இருந்தே பெறுவது இதன் சிறப்பம்சமாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்