தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி அழுத்தத்தின் காரணமாக அடுத்த மாதம் முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக வோடாஃபோன் ஐடியா லிமிடெட் (VIL) அறிவித்துள்ளது.
முன்னதாக, தொலைபேசி அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் (ஏஜிஆர்) குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு அனுமதி (லைசென்ஸ்) கட்டணமாகவும், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு) பயன்பாடு கட்டணமாகவும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, பாரதி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும், கடைசியாக இந்த நிலுவைத் தொகைகளை வழங்கும் போது பாரிய நிகர இழப்புகளை வெளியிட்டது.
இதுதொடர்பாக வேடாஃபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வரும் டிச.1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. எனினும், எவ்வளவு கட்டணம் உயர்த்த உள்ளது என்பது குறித்த எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மொபைல் சேவைகளை தொடர்ந்து வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவின் பார்வையை உணர்ந்து எங்களின் உரிய பங்கை வகிப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் இருந்து வோடாஃபோன் வெளியேறுவதாக வெளிவந்த வதந்திகளுக்கும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வேடாஃபோன் சிஇஓ ரவீந்தர் தக்கர் கடந்த வாரம் கூறும்போது, அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது என்றும் நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் பணியில் உள்ளோம் என்றும் கூறியிருந்தார்.
மொபைல் டேட்டா சேவைகளுக்கான தேவைகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.
தொலைத்தொடர்பு துறையில் கடுமையான நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அனைத்து பங்குதாரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக தொடர்ந்து, தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவானது ஆராய்து வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்தன. சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய காரணத்தால் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
அதன்படி, இந்தியாவில் வேறு எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ஏற்படாத மிகப்பெரிய இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.50,921 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.23,045 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடஃபோன் ஐடியா இந்தியாவில் தன்னை அதிவிரைவில் வளர்த்துக்கொண்டு வருகிற 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 பில்லியன் இந்திய மக்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம் என தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்