ஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எரிமலை சீற்றத்தை, `இது அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயம்' என்று விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த எரிமலை, அதிவெப்பம் நிறைந்த குழம்பை கக்கி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த எரிமலை பொறுமையான அளவில் எரிச் சாம்பலையும், அவ்வப்போது சிறிய அளவிலான எரி குழம்பையும் கக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அங்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உணரிகள் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் மிக கவனமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக கிலோவா எரிமலை தற்போது வெளியிட்டு வரும் அளவுக்கான எரி குழம்பை கக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எரிமலை குமுறலால், அபாயகரமான பல வாயுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதன் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான ஹவாய் மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 45 வீடுகளை கிலோவா எரிமலையில் இருந்து வெளியே வந்த குழம்பு சாம்பலாக்கி உள்ளது. கிலோவா எரிமலைக்குப் பக்கத்தில் ஒரு ஜியோ-தெர்மல் மின்சார ஆலை இருக்கிறது. இது தான், ஹவாய் தீவின் மின்சாரத் தேவையில் 25 சதவிகிதத்தை இட்டு நிரப்புவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆலைக்கும் ஆபத்து நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மின்சார ஆலையின் நிர்வாகத் தரப்பு, `கிலோவா எரிமலை பொங்க ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் உஷாராகத் தான் இருக்கிறோம். எங்கள் ஆலையை முழுவதுமாக இப்போது முடிவிட்டோம். எரி குழம்பால் ஆலைக்கு எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறோம்' என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.
இப்படி ஒரு பக்கம் உஷார் நடவடிக்கைகளை அரசும், உள்ளூர் நிர்வாகமும் முழு வீச்சில் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கிலோவா எரிமலையை ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், `இந்த எரிமலையை கடந்த 25 ஆண்டுகளாக கவனித்து வருகிறோம். எனவே, இதில் நடந்த அனைத்து மாற்றங்களையும் உன்னிப்பாக பார்த்து வருகிறோம். எரிமலை அதன் இறுதி கட்டத்தை தற்போது அடைந்துள்ளது. எனவே, இங்கிருந்து எப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் வரும் என்று பார்க்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம். இந்த எரிமலையின் முடிவை வைத்து வருங்காலத்தில் இதைப் போல் நடக்கும் சம்பவத்துக்கு நாம் முன் கூட்டியே தயாராக முடியும். இதைச் செய்வது ஹவாய் மக்களுக்கு மிகுந்த பயன் தரும்' என்றுள்ளனர் ஆர்வ மிகுதியுடன்.
கிலோவா எரிமலை மிக ஆக்ரோஷமாக பொங்கி வருவதால், பலர் இது உலகின் அழிவு என்றெல்லாம் வதந்தி பரப்பி வருகின்றனர். இது குறித்து விஞ்ஞானிகள், `இந்த ஒரு எரிமலை பொங்குவதால், மீதம் உள்ள உலகம் முழுவதற்கும் ஆபத்து என்று கூறுவதெல்லாம் சுத்த அபத்தமான விஷயம். இதனால், நிலநடுக்கங்களோ அல்லது சுனாமியோ வர வாய்ப்பில்லை. எனவே, வீணாக வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றனர் உறுதிபட.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்