சாம்சங் நிறுவனம், தனது A வரிசை போன்களை மிகப் பெரிய அளவுக்கு இந்தியாவில் சந்தைப்படுத்த முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதிக்குள் 64 மெகா பிக்சல் கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மார்ட் போனை, அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது.
இரண்டு வகைகளில் இந்த போன் இந்திய சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அதன் விலை ஏறக்குறைய 30,000 ரூபாயை ஒட்டியிருக்கலாம். சமீபத்தில் வெளியான கேலக்ஸி A30s ஸ்மார்ட் போனின் அதிநவீன டிசைன்களை A70s-ம் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம், முன்னதாக வெறும் 70 நாட்களில் சுமார் 50 லட்சம் A வரிசை போன்களை விற்று, சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
“இந்த ஆண்டு முடிவுக்குள் சாம்சங் கேலக்ஸி A வகை போன்களின் சந்தையை 4 பில்லியன் டாலர் அளவுக்கு விரிவுப்படுத்துவதுதான் எங்களின் குறிக்கோள்” என்று சாம்சங் இந்தியாவின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி ரஞ்சிவிஜித் சிங் கூறியுள்ளார்.
கடந்த வாரம் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி A50s மற்றும் A30s போன்களை இந்தியாவில் ரிலீஸ் செய்தது. முன்னதாக வெளியான A50 மற்றும் A30 போன்களின் அப்டேட்டட் வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்ட போன்கள் சந்தைக்கு வந்தன.
கேலக்ஸி A50s போனின் 6 ஜிபி + 128 ஜிபி வகை 24,999 ரூபாய்க்கும், 4 ஜிபி + 128 ஜிபி வகை 22,999 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல கேலக்ஸி A30s போனின் 4 ஜிபி + 64 ஜிபி வகை 16,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர சாம்சங் நிறுவனம் தனது M வரிசை போன்களின் இரண்டு புதியவற்றை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி M30s மற்றும் M10s போன்கள் அமேசான் தளம் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்