64 மெகா பிகசல் கேமரா கொண்ட ரெட்மீ போன் சீக்கிரமே உங்கள் கைகளில் தவழலாம். இது குறித்துத் தகவலை வீபோ தளத்தில் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகில் 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா போன்கள்தான் உள்ளன. இந்த புதிய போன் வரும் பட்சத்தில், இதுவே 64 மெகா பிக்சல் கொண்ட முதல் போனாக இருக்கும். கடந்த மே மாதம் சாம்சங் நிறுவனம், ISOCELL ப்ரைட் GW1 கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. அந்த கேமராவைத்தான் சியோமி நிறுவனம் பயன்படுத்தும் என்று பரவலாக பேசப்படுகிறது. அந்த கேமரா சென்சாரில் 0.8 மைக்ரான்ஸ் அளவு கொண்ட பிக்சல் அளவு இருக்கும். மேலும் மிகவும் இருட்டான இடத்திலும் 16 மெகா பிக்சல் திறன் கொண்ட படங்களை இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட கேமராவால் எடுக்க முடியும்.
அதே நேரத்தில் ரெட்மீ போனில் வரவுள்ள இந்த புதிய 64 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமராவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். ஆனால், அதிக சூம் செய்யும் திறனுடன் இந்த போன் வரும் எனத் தெரிகிறது.
மேலும் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL ப்ரைட் GW1 கேமரா சென்சார்தான் இந்த புதிய 64 மெகா பிக்சல் கேமராவாக பயன்படுத்தப்படுமா என்பது குறித்து சியோமி நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி மட்டும்தான், இந்த 64 மெகா பிக்சல் கேமராவை முதன்முதலாக களமிறக்கும் எனப்படுகிறது. சாம்சங் நிறுவனமும் கேலக்ஸி ஏ-சீரிஸ் போன் மூலம் 64 மெகா பிக்சல் கேமராவை களமிறக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில் ரியல்மீ இந்தியா சி.இ.ஓ மாதவ் சேத், சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், 64 மெகா பிக்சல் கொண்ட புதிய போனை இந்த ஆண்டு முடிவுக்குள் சந்தையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்