எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் போது, ஹூவேய்தான் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ, ரிச்சர்டு யூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹூவேய் மற்றும் ஹானர் நிறுவன போன்கள் கூட்டு விற்பனையால், சீக்கிரமே தாங்கள் பெஸ்ட் ஸ்மார்ட் போன் கம்பெனியாக உருவெடுப்போம் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் யூ கூறியுள்ளார். 2019-ல் தங்கள் கம்பெனி, நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறும் யூ, 2020-ல் அதை அடைந்துவிடுவோம் என்கிறார்.
ஹூவேய் நிறுவனத்தில் பி30 வகை போன்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி கருத்தை ரிச்சர்டு யூ தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா போன்ற இடங்களில் இன்னும் ஹூவேய் கால் பதிக்காத போதும், அடுத்த ஆண்டு முதலிடத்தைத் தன் நிறுவனம் பிடித்துவிடும் என்கிறார் யூ. அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டு முடிவதற்குள், அந்த இலக்கை அடைவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்கிறார் யூ.
அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஹூவேய் நிறுவனத்துக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பிரச்னை நிலவி வருகிறது. இதனால், தங்கள் நிறுவனத்திற்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றதற்கு, ‘உண்மையில் அந்த விவகாரம் எங்கள் நிறுவனம் குறித்து பலர் தெரிந்துகொள்ளவே உதவியது. இதுவரை ஹூவேய் பற்றி கேள்விப்படாதவர்கள் கூட இப்போது அது குறித்து தெரிந்து வைத்துள்ளார்கள்' என்று சொல்கிறார்.
2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை உலகளவில் சரிந்தபோதும், ஹூவேய் நிறுவனத்தின் போன் சேல் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இது ரிச்சர்டு யூ-வின் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். மேலும் ஒரு செய்திக் குறிப்பில், ‘2018 இரண்டாவது காலாண்டில், உலக அளவில், போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹூவேய், இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சாம்சங் மட்டுமே ஹூவேய் வழியில் இருக்கிறது' என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2018 நான்காவது காலாண்டில் ஆப்பிள், மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்றும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்