ஃப்ளிப்கார்ட் ஃப்ளாஷ் சேல் முதல் விவோ ஹானர் என பல ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் வரை என இந்த வாரம் கேட்ஜெட்ஸ் உலகில் பிசியான வாரமாகவே இருந்தது. அப்படி இந்த வாரம் வெளியான கேட்ஜெட்ஸ் செய்திகளில் நீங்கள் தவறவிடக்கூடாத செய்திகளின் தொகுப்பு இதோ!
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று 'சூப்பர் ஃப்ளாஷ் சேல்' ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி டாப் நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro, ரெட்மீ 7A, ரியல்மீ X, ரியல்மீ 3i, என ஐந்து ஸ்மார்ட்போன்கள் இந்த சூப்பர் ஃப்ளாஷ் சேலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28, அதாவது ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதலாவதாக ரெட்மீ K20 Pro. இந்த ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.
இதனுடன் அறிமுகமான ரெட்மீ K20 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனையாகவுள்ளது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது.
ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமானது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாக உள்ளது.
3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
கூகுள் பிக்சல் 3, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 9N, போக்கோ F1 மற்றும் நோக்கியா 6.1 ஆகியவை ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன. இன்று தொடங்கிய இந்த விற்பனை ஜூலை 31 புதன்கிழமை வரை நீடிக்கும். இந்த விற்பனை ஹானர் 10 லைட், ஹானர் 7s, ஹானர் 9i மற்றும் ஹானர் 9 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களையும் தள்ளுபடி விலையில் தருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஒப்போ ரெனோ 10X ஜூம் மற்றும் ஹானர் 20 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்கவுள்ளது இந்த விற்பனை. இதேபோல், இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் ஆசுஸ் 6Z, பிளாக் ஷார்க் 2, மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள், கட்டணமில்ல இ.எம்.ஐ-யில் கிடைக்கப்பெறவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் பெரிய தள்ளுபடியாக கூகுள் பிக்சல் 3 ரூ.49.999 என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரூ. 71,000 என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் 15.999 ரூபாயிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் 10,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் இந்த விற்பனையில் ஹானர் 9N 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனை "மிகக் குறைந்த விலையை" வழங்குவதாக கூறியுள்ளது. 9,999 ரூபாய் என்ற விலையில் இருந்த இந்த ஸ்மார்ட்போன், 8,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
20,999 ரூபாயிலிருந்த போகோ F1 ஸ்மார்ட்போன் 18,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் நோக்கியா 6.1 4GB RAM + 64GB சேமிப்பு வகை 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல 3GB ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 12.999 ரூபாய்.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கையில் இந்த 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் வாடிக்கையாளர்கள், ஐபோன் 8 பிளஸை 51.999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். சாதாரனமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை 66,000 ரூபாயில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஜியோ 'ஜிகாபைபர்' (GigaFiber), அதிவேக பைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவை, அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 12 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த அறிமுகம் ரிலையன்ஸ் நிறுவங்களில் ஆண்டு பொது கூட்டத்தின்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது கூட்டத்தின்போது, ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் 1,100 நகரங்களில் இந்த 'ஜிகாபைபர்' சேவைக்கான முன்பதிவை துவங்கி வைத்தது. இருப்பினும், இன்னும் வணிக ரீதியான அறிமுகம் இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் காலாண்டு நிதி முடிவுகள் பற்றி அறிவிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜிகாபைபருக்கான பீட்டா சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இந்த சோதனை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்த பீட்டா சோதனை பல மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிமுகம் குறித்த எந்த ஒரு தகவலையும், ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் 12 அன்று ரிலையன்ஸ் நிறுவங்களில் ஆண்டு பொது கூட்டத்தின்போது ஜியோ 'ஜிகாபைபர்' அறிமுகமாகும் என தகவல் வெளியாகிய வண்னம் உள்ளது.
ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், மொபைல் போன்களுக்கென பிரத்யேக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பல மாத சோதனைக்குப் பின்னர் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 199 ரூபாய்க்கு இந்த மொபைல் பிளான், மூலம் போன்களுக்கு மட்டும் சப்ஸ்கிரிப்ஷன் பெற முடியும். எஸ்.டி தரத்தில் மட்டுமே இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வீடியோவைப் பார்க்க முடியும். நெட்ஃப்ளிக்ஸ், சாதரணமாக தனது மாதாந்திரக் கட்டணத்தை 499 ரூபாய் என வைத்துள்ளது. அதை ஒப்பிடும்போது, ரூ.199 என்பது மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், பலர் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொபைல் பயனர்களை மட்டும் குறிவைத்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
இந்த ரூ.199 திட்டத்தைப் பெறுவதன் மூலம் டேப்லட் அல்லது மொபைல் போன்களில் ஒரு திரையில் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் தள வீடியோக்களைப் பார்க்க முடியும். டிவியில் இந்த பிளான் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் இணைப்பு கொடுக்க முடியாது.
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில்தான் மொபைல் மூலம் நெட்ஃப்ளிக்ஸைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால், இந்தத் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் முன்னணியில் இருக்கும் அமேசான் பிரைம் மற்றும் ஹாட் ஸ்டாருடன் நெட்ஃப்ளிக்ஸ் ஆக்ரோஷமாக போட்டியிட உள்ளது.
ஹாட்ஸ்டாரின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 299 ரூபாய் ஆகும். அமேசான் பிரைமின் ஒரு மாத சப்ஸ்கிரிப்ஷன் 129 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த சீன நிறுவனத்தின் 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்துள்ளது விவோ நிறுவனம். இந்த அறிவிப்பு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான சில வாரங்களிலேயே வந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை 3 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்டது. இதன் முதல் விற்பனை ஜூலை 11 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. அந்த விற்பனையில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை சில நிமிடங்களிலேயே தீர்ந்து போனதால், அன்று இரவு 8 மணிக்கே மற்றொரு விற்பனையையும் அறிவித்தது விவோ நிறுவனம். அதற்கு அடுத்து ஜூலை 16 அன்று மற்றொரு ஃப்ளாஷ் சேல் நடைபெற்றது. .
'விவோ Z1 Pro' ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கேமரா, ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேம் மோட் 5.0 மற்றும் மல்டி-டர்போ ஆகிய வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பப்ஜி மொபைல் கிளப் ஓபனின் அதிகாரப்பூரவமான ஸ்மார்ட்போன் இதுதான்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை 14,990 ரூபாய். இந்த 14,990 ரூபாய் 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என மொத்தம் மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகையின் விலை 16,990 ரூபாய். 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகையின் விலை 17,990 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மிரர் ப்ளாக் (Mirror Black), சோனிக் ப்ளாக் (Sonic Black), மற்றும் சோனிக் ப்ளூ (Sonic Blue) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
முன்ன்தாக பாக்கிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட 'விவோ Y90' ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6,990 என்ற விலையில் அறிமுகமானது. இந்த புதிய விவோ Y-தொடர் ஸ்மார்ட்போனில் வாட்டர்ட்டாப்-ஸ்டைல் நாட்ச், ஒற்றை பின்புற கேமரா அமைப்பு மற்றும் மேட்-போன்ற பின்புற பேனல் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 6.22-இன்ச் HD+ திரை, ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர், ஒற்றை 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 4,030mAh பேட்டரி மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. சுமார் இந்த தொலைபேசி பாகிஸ்தானில் இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஃபன்டச் OS 4.5-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அமைப்பை கொண்டுள்ளது. 6.22-இன்ச் HD+ (720x1520 பிக்சல்கள்) திரையையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 2GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 32GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. 512GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஒற்றை பின்புற கேமரா அமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் அளவிலான பின்புற கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4,030mAh அளவு பேட்டரி பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். வை-பை, GPS, ப்ளூடூத் 5 ஆகிய வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், மைக்ரோ USB போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 155.11x75.09x8.28mm என்ற அளவுகளை கொண்ட இந்த Y90 163.5 கிராம் எடையை கொண்டுள்ளது.
ஹானர் 9X மற்றும் ஹானர் 9X Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் செவ்வாய் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 810 எஸ் ஓ சி, ஜிபியூ டர்போ 3.0, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச வசதிகளை இந்த ஸ்மார்ட்போன்கள் பெற்றுள்ளன. இரண்டு போன்களிலும் 16 மெகாபிக்சல் பாப் =-அப் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 9X Pro-வில் 3 பின்புற கேமராக்கள் உள்ளது. 9X-ல் இரண்டு பின்புற கேமரா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
ஹானர் 9X-ன் 4GB RAM + 64GB சேமிப்பு வசதி கொண்ட வகை, 14,000 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இந்த போனின் 6GB + 64GB வகை போன் 16,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் 6GB + 124GB வகை போன் 19,000 ரூபாய்க்கு சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. மிட்நைட் கருப்பு, மிட்நைட் ப்ளூ, சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
ஹானர் 9X Pro ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB சேமிப்பு வசதி கொண்ட வகை, 22,000 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. அதே நேரத்தில் அந்த போனின் 8GB RAM + 256GB சேமிப்பு வசதி கொண்ட போன், 24,000 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இந்த போன், மிட்நைட் கருப்பு, ஃபேன்டம் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா மொபைல் நிறுவனம் வியாழக்கிழமை தனது மோட்டோ E-தொடரில் புதிய ஸ்மார்ட்போனான 'மோட்டோ E6' அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ E-தொடரின் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், புதிய 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனே ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். நாட்ச் டிஸ்ப்ளே, ஹோல்-பன்ச் போன்ற தற்போதைய ட்ரெண்டை மோட்டோ E6 தவிர்த்து பழைய வடிவிலேயே வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டு முன்பு வெளியான ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தை போன்றே தோற்றம் கொண்டுள்ளது இந்த புதிய 'மோட்டோ E6'.
நீலம் (Navy Blue) மற்றும் கருப்பு (Starry Black) என இரு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் வெரிசான் தளத்தில் விற்பனையாகிறது. T-மொபைல், பூஸ்ட் மொபைல் என மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கனடாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் HD+(720x1440 பிக்சல்கள்) திரை, 18:9 திரை விகிதம், 296ppi திரை அடர்த்தி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. ஒரே ஒரு சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 435 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஆசியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு வசதியுடனே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரே ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, GPS என அனைத்து வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 149.7x72.3x8.57mm என்ற அளவு கொண்டும் 159 கிராம் எடை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது அந்த கேமின் லைட் வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டுக்கு முன்னர்தான் பிலிப்பைன்ஸில் பப்ஜி லைட் கேம் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைந்த் திறனுடைய ஸ்மார்ட் போன்கள் வைத்துள்ளவர்களை குறிவைத்து இந்த மொபைல் கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய மொபைல் போன் பயனர்கள், பப்ஜி மொபைல் லைட் கேமை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பப்ஜி மொபைல் கேம் உருவாக்கப்பட்டதைப் போன்றே, லைட்டும், ‘அன்ரியல் இஞ்சின் 4' கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பப்ஜி மொபைல் கேமில், 100 பேர் விளையாட முடியும். இந்த லைட் கேமில், 60 பேர் மட்டுமே விளையாட முடியும்.
பப்ஜி லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதே நேரத்தில்தான், பப்ஜி மொபைல் கேமிற்கு, வெர்ஷன் 0.12.0 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘ஆர்பிஜி-7' ஆயுதம் மற்றும் ‘பக்கி' வாகனம், அதுமட்டுமல்லாமல் புதிய இடமும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல கிளாசிக்கல் மோடில், 60 பேர் வரை விளையாட முடியும். முன்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக இருந்தது.
டென்சென்ட், பப்ஜி லைட் கேமை இன்ஸ்டால் செய்ய 400 எம்.பி இருந்தால் போதும் என்று சொன்னாலும், அதன் மொத்த சைஸ் 491 எம்.பி ஆகும்.
இந்த புதிய பப்ஜி லைட்டின் சிறப்பம்சங்களாக, குறிவைப்பதற்கு ஏதுவாக டிசைன், புதிய வின்னர் பாஸ், புல்லட் டிரெய்ல் அட்ஜெஸ்மென்ட், வெகு நேரம் நீட்டிக்கப்பட்ட தாக்கும் நேரம், நகரும் போதே குணப்படுத்திக் கொள்ளுதல், மேப் ஆப்டிமைசேஷன், லொகேஷன் டிஸ்ப்ளே ஆகியவை இருக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்