Photo Credit: Unsplash
இந்தியாவில் விற்கப்படும் செல்போன்களுக்கு பொதுவான சார்ஜிங் கனெக்டர் விதியை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C போர்ட்டாக இருக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. 2022ல் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆணையைப் போலவே, இந்த விதி அமலுக்கு வந்தால் பல சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரே கேபிளைப் மக்கள் பயன்படுத்தலாம். வேறு வேறு சார்ஜிங் பின் வயர்களை தேடி அலைய வேண்டியதில்லை.
இன்னும் சில வருடங்களில் லேப்டாப்களை சார்ஜ் செய்யவும் டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்துவதை அரசாங்கம் கட்டாயப்படுத்தலாம். இந்த விதி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த விதி பல வகையான கேபிள்களால் உருவாகும் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் எல்லா சாதனங்களையும் ஒரே கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.
2022ல் ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற உத்தரவை நிறைவேற்றியது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹெட்செட்கள், கையடக்க வீடியோ கேம் கன்சோல்கள் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்கள் முழுவதும் USB Type-C சார்ஜிங் போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படும் முறையாக மாற்றியது. இந்த விதியின் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் USB Type-C போர்டுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023ல் iPhone 15 USB Type-C போர்ட் மூலமே சார்ஜ் செய்யப்படுகிறது.
இந்தியாவில் தொழில்துறை நிறுவனங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற மின்னணு சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C மாற்றப்படுவதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது என கூறினார். எந்த காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தியா இப்போது பொதுவான சார்ஜர் விதிகளை அறிவிக்க தயாராகி வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்