வாஷிங்டன்: அரிசி பருக்கையை விட சிறிய அளவிலான, உலகின் மிகச் சிறிய கணினியை மிச்சிகன் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவிக்கு ‘மிச்சிகன் மைக்ரோ மோட்’ என பெயரிடப்பட்டுள்ளது. சாதரண கணினிகளில் இருப்பதைப் போல, மின்சாரம் இல்லாதபோதும் தகவல்களை சேமித்து வைக்கும் வசதி இந்த மைக்ரோ மோட்டில் இல்லை. மைக்ரோ மோட் கணினியை ஸ்விட்ச் ஆஃப் செய்தால், தகவல்கள் அழிந்துவிடும் என சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
“மில்லிமீட்டர் அளவுள்ள இந்த கருவியை கணினி என்று சொல்ல முடியாது என்றாலும் கூட, அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான செயற்பாட்டுதிறனை கொண்ட கருவியாக உள்ளது" என்று மின் மற்றும் கணினி பொறியியல் துறை பேராசிரியர் டேவிட் ப்ளாவ் கூறினார்.
‘மிச்சிகன் மைக்ரோ மோட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மைக்ரோ கணினி கருவி ரான்டம் ஆக்சஸ் மெமரி, போட்டோவால்டிக்ஸ், செயலிகள், வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர்கள் கொண்டுள்ளது. இவ்வளவு சிறிய கருவியின் மேல் ரேடியோ ஆண்டனாக்கள் பொருத்த முடியாது என்பதால், இக்கருவியில் ஒளி வெளிச்சத்தால் தகவல் பரிமாற்றம் நடக்கிறது.
சென்சார் மூலம் உஷ்ணநிலையை துல்லியமாக கணிக்க கூடிய இந்த கருவி, புற்றுநோயியல் ஆராய்ச்சிக்கு உதவும் என தெரிகிறது. “இந்த கருவி, புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவியாக அமையும். உஷ்ணநிலை சென்சார்கள் சிறியதாகவும் உயிர் இணக்கமாகவும் உள்ளதால், புற்றுநோய் உயிரணுக்கள் வளர்ந்து வரும் ஒரு எலியின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி செய்யலாம்” என தெரிவித்தார் கதிரியக்க சிகிச்சை மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் பேராசிரியர் கேரி லூக்கர்.
மேலும், “புற்றுநோய் உயிரணுக்களுக்கும், சாதரண உயிரணுக்களுக்கும் உள்ள வேறுபாட்டினை இந்த உஷ்ணநிலை சென்சார்கள் மூலம் ஆராய்ச்சி செய்யலாம். இதன் மூலம், ஆதி நவீன சிகிச்சைகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும்” என்றும் கூறினார்.
விஎல்எஸ்ஐ தொழில்நுட்பம் மற்றும் சர்க்யூட்கள் குறித்த சிம்போஸியாவில் இந்த ஆராய்ச்சி சமர்ப்பிக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்