தனக்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் பரப்பப்படும் பிரச்னையுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் சேவைக்கு (UPI) மத்திய மின்னணு & தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEiTY) அனுமதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த வாட்சப் பேமென்ட் இந்தியாவில் சோதனை முயற்சியில் உள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்று ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் சூசகமாகக் கூறியுள்ளார்.
பயனாளர்களின் தகவல்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி, தான் கண்காணிக்க ஏதுவாக தரவுகளின் சேமிப்பு இருக்கவேண்டும் என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பிப்ரவரியில் முன்னோட்டமாகச் சோதனை தொடங்கினாலும் இன்னும் வாட்ஸ் ஆப் பேமென்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தாமதத்தால் போட்டி நிறுவனமான பே டிஎம், கூகுளின் தேஸ் ஆகியவை லாபமடைந்து வருகின்றன.
அண்மையில் நடந்த ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மார்க் சக்கர்பெர்க், "வாட்ஸ் ஆப் பேமென்ட் வசதி இந்தியாவில் சோதனையில் உள்ளது. இது எளிதில் பணத்தை அனுப்ப ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சோதனையில் இதைப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் கருத்துகள் கிடைத்துள்ளன. அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதே நேரத்தில் பிற நாடுகளிலும் விரைந்து அறிமுகப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டோம்" என்றார்.
மேலும் அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாட்ஸ் ஆப் வழியான தொழில் சூழலை கட்டமைக்கும் திட்டம் இருப்பதையும் உணர்த்தினார். ஏற்கனவே இதுபோன்ற செயல்பாடுகளில் சீனாவில் ஈடுபட்டு வரும் வீ-சாட் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இது அமையும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்