Photo Credit: Google Maps
நாம் கூகுளில் என்ன தேடுவோம். அருகாமையில் ஏதாவது உணவகங்கள் இருக்கின்றனவா, ஏதாவது தங்கும் விடுதிகள் இருக்கின்றனவா போன்றவற்றைத் தேடுவோம். அவைகளை பயன்படுத்தியதும், அதற்கு கூகுளில் 5-ற்கு எத்தனை ஸ்டார்கள் என மதிப்பீடு வழங்கி, அதற்கான விமர்சனங்களை எழுதுவோம். இது அனைவருக்கும் வழக்கமான ஒன்று. ஆனால், டெல்லியில் உள்ள ஒரு குப்பை கிடங்கை தேடி அந்த இடத்திற்கு மதிப்பீடு மற்றும் விமர்சனங்களை வழங்கியுள்ளனர், அவ்வூர் மக்கள். அந்த விமர்சனங்கள் 200 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. ஏன் அவர்கள் அந்த இடத்திற்கு மதிப்பீடு அளித்தார்கள், அவர்கள் என்னென்ன விமர்சனங்களை பதிவிட்டிருந்தார்கள்?
அந்த விமர்சனங்கள் அளித்தவர்களில் ஒருவர், "நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்ல வேண்டிய மிகச் சிறந்த இடம் இது" எனக் கூறுகிறார். மற்றொருவரோ,"குடும்பத்தினருடன் வெளியே செல்ல, நேரத்தை செலவிட ஒரு நல்ல இடம்" என பதிவு செய்துள்ளார். மற்றொருவர் மிகவும் கடுமையாக அங்கு உள்ள சுகாதாரமற்ற நிலையை வெளிப்படுத்தும் வகையில், "அங்கு கிடைக்கும் சுவையான பஞ்சாபி சாலட் உணவை சுவைக்க தவறிவிடாதீர்கள்." எனக் கூறியுள்ளார். "வெளிநாட்டவர்கள் உண்மையான இந்தியாவை காண வேண்டுமா? இங்கு வாருங்கள்" என பதிவிட்டிருக்கிறார்.
ஏன் இப்படி இந்த குப்பை கிடங்கை விமர்சிக்கிறார்கள் என்று பார்த்தால், மலைபோல அங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைதான் காரணம். டெல்லியில் மொத்தம் மூன்று குப்பை கிடங்குகள் உள்ளன. ஒன்று கசிபூர் குப்பை கிடங்கு, மற்றும் தெற்கு டெல்லியில் அமைந்திருக்கும் ஒக்லா குப்பை கிடங்கு, இனொன்று வடக்கில் அமைந்திருக்கும் பல்ஸ்வா குப்பை கிடங்கு. இதில், தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் குப்பை கிடங்கு, கசிபூர் குப்பை கிடங்குதான். இங்கு கிழக்கு, மத்திய மற்றும் பழைய டெல்லியில் உற்பத்தியாகும் குப்பைகள் எல்லாம் இந்த கிடங்கில்தான் வந்து கொட்டப்படுகிறது. அப்படி கொட்டப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதுமில்லை. அதனால் இங்குள்ள குப்பையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் நிலை என்னவென்றால், இன்னும் சில நாட்களில் இந்த குப்பையாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் மலையின் உயரம் குதுப்மினாரின் உயரத்தையே எட்டிவிடும் என விமர்சிக்கிறார்கள்.
அந்த கிடங்கை சுற்றி காற்று மாசு உச்சத்தில் உள்ளது. அதே நேரம் அங்கு இந்த குப்பை கிடங்கால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பிடத்தக்கதாக, 2017 ஆம் ஆண்டு இந்த கிடங்கு தன் முழு கொள்ளளவை எட்டி குப்பை சரிந்து இருவர் உயிரிழந்தனர். சுகாதாரத்துறை வகுத்திருக்கும் எந்த ஒரு விதிகளையும் இந்த குப்பை கிடங்கு பின்பற்றவில்லை. மனிதர்களிடம் இருந்தும், நிலத்திற்கும் குப்பைகிடங்கிற்கும் ஒரு தொடர்பு இல்லாதவாரே குப்பை கிடங்கு அமைந்திருக்க வேண்டும் எங்கிறது சுகாதாரத்துறை. ஆனால் இவை எவற்றையும் பின்பற்றி அந்த குப்பை கிடங்கு கட்டமைக்கப்படவில்லை.
அங்கு மலைபோல் குவிந்திருக்கும் அந்த குப்பை கிடங்கை ஒருவர் விமர்சிக்கையில்,"இந்த மலை நாம் காண்பதற்கு, நம் கண்களுக்கு ஒரு நல்ல விருந்து. நம்மிடம் ஒரு சொந்த மலையே இருக்கிறது, நாமும் இந்த அரசாங்கமும் சேர்ந்து உருவாக்கிய மலை, அந்த மலையில் ஏன் நாம் ஒரு சவாரி சென்றுவரக்கூடாது. அங்கு குவிந்திருக்கும் ப்லாஸ்டிக்கின் உதவியுடன் நாம் ஏன் அந்த மலையின் மீது மலையேரக்கூடாது" என்ற அவர் கூறியுள்ளார்.
இந்த குப்பை கிடங்கிற்கு, கூகுளில் கிடைத்திருக்கு மொத்த மதிப்பீடு 4/5 ஸ்டார்கள். இந்த குப்பை கிடங்கின் மோசமான நிலையை வெளிக் கொண்டுவரவே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளனர், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்