Photo Credit: Twitter/ Narendra Modi
'ககன்யான்' திட்டம் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்று சாதனையாகவும், புதிய இந்தியாவுக்கு ஒரு மைல்கல்லாகவும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"குடியரசு தினத்தின் புனிதமான சந்தர்ப்பத்தில், 'ககன்யான்' பற்றி உங்களுக்குச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இலக்கை நோக்கி நாடு மற்றொரு படி எடுத்துள்ளது. 2022-ஆம் ஆண்டில், 75-ஆவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவோம். அந்த சந்தர்ப்பத்தில், ககன்யான் திட்டம் மூலம் ஒரு இந்தியரை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்,” என்று மோடி தனது முதல் 'மான் கி பாத்' உரையில் கூறினார்.
"ககன்யான் திட்டம் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். மேலும், இது புதிய இந்தியாவுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இந்திய விமானப்படையின் நான்கு விமானிகள் இந்த திட்டத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இந்த திட்டத்திற்கான, பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு செல்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
"விண்வெளி வீரர்களாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் இந்திய விமானப்படையின் விமானிகள் ஆவர். இந்த திறமையான இளைஞர்கள் இந்தியாவின் திறன்கள், திறமை, திறன், தைரியம் மற்றும் கனவுகளின் அடையாளங்கள். அவர்கள் விரைவில், அடுத்த சில நாட்களில் ரஷ்யாவுக்கு பயிற்சி பெறுவார்கள்," என்று மோடி கூறினார்.
இந்த திட்டம், ரஷ்யாவுடன் நெருக்கமான மற்றும் ஆழமான உறவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
"இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் மற்றொரு பொன்னான அத்தியாயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு, தேசத்தின் நம்பிக்கைகளையும் ஆவலையும் சுமந்து விண்வெளியில் செல்லும் பொறுப்பு அவர்களில் ஒருவரின் தோள்களில் இருக்கும். குடியரசு தினத்தின் நல்ல சந்தர்ப்பத்தில், இந்த நான்கு இளைஞர்களையும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களையும் வாழ்த்துகிறேன்," என்று அவர் கூறினார்.
நரேந்திர மோடி அரசு ககன்யான் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வெளியீடு 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திரத்தின் ஆண்டுடன் ஒத்துப்போகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்