பப்ஜி கேமை தடை செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹாத் நிசாம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளான். அவனது தாயார் மூலமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds') கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீனாவின் இண்டர்நெட் மன்னன் 'டென்சென்ட்' பப்ஜி கேமை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியுள்ளது. இந்த கேமை 20 கோடிப்பேர் டவுன்லோட் செய்துள்ளனர். தினமும் உலகம் முழுவதும் 3 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.
இந்த நிலையில் பப்ஜி கேம் வன்முறையையும், கோபத்தையும் தூண்டுவதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹாத் நிசாம் வழக்கு தொடர்ந்துள்ளான். பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவன் வலியுறுத்தியுள்ளான்.
இதுதொடர்பாக சிறுவன் தொடர்ந்திருக்கும் மனுவில், ‘' ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அற நெறிகளை (Ethics) மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும். வன்முறை, வெறுப்புணர்வு, கோபத்தை தூண்டும் பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்