இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
ஜொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம், அமித் சுக்லா என்னும் நபர், கடந்த திங்கட் கிழமை ஃபுட் ஆர்டர் செய்கிறார். அதை கொண்டு போய் கொடுக்கும் பொறுப்பு ஃபயிஸுக்கு வந்து சேர்கிறது. மத்திய பிரதேச ஜபல்பூரில் பணி செய்யும் ஃபயிஸுக்கு, இது எபோதும் போலான வேலைதான். ஆனால், அவருக்கே தெரியாமல் 2 மணி நேரத்தில் இணைய பேசு பொருளாக மாறுகிறார் ஃபயிஸ்.
அமித் சுக்லா என்னும் அந்த நபர், “ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார்.
தொடர்ந்து அமித் சுக்லா, ஜொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மத்திய பிரதேச போலீஸ் சுக்லாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவரின் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், “இந்தியா என்கிற நாடு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களின் பன்மைத்துவத்தை மதிக்கிறோம். எங்கள் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஒரு வியாபாரத்தை இழப்பதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இப்படி ஜொமேட்டோவின் கருத்துக்கு, பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இன்னொரு உணவு டெலிவரி செயலியான உபர் ஈட்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களோடு துணை நிற்கிறோம்” என்று ஜொமேட்டோவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இதனால் எரிச்சலடைந்த சிலர், உபர் ஈட்ஸ் மற்றும் உபர் செயலியை தங்களது மொபைல் போனிலிருந்து அன்-இன்ஸ்டால் செய்துள்ளனர். தொடர்ந்து #BoycottUberEats என்ற ஹாஷ்-டேக்கையும் ட்ரெண்டாக்கி விட்டனர். குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஸ்டோரிலும் உபர் மற்றும் உபர் ஈட்ஸ் செயலிகளுக்கு 1 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்