கேரளாவில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 67 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 'ரெட் அலர்ட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் உள்ள தமது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இலவச கால்கள், டேட்டா அளிக்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஜியோ ஆகியவை முன்வந்துள்ளன. போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் தமது கட்டணங்களைச் செலுத்த தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில ஏர்டெல் ஸ்டோர்களில் இலவச வைபை, போனை சார்ஜ் செய்துகொள்ளும் வசதி ஆகியவை வழங்கப்படும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, ப்ரீபெய்ட் பயனர் அனைவருக்கும் முப்பது ரூபாய்க்கான டாக்டைம் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் - ஏர்டெல் உள்ளூர்/வெளியூர் அழைத்தும் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை இலவசம். தற்போது வழங்கப்படும் முப்பது ரூபாயை பின்னர் செலுத்தினால் போதுமானது. இதனுடன் ஒரு வார வேலிடிட்டி உடைய ஒரு ஜிபி டேட்டாவும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். போஸ்ட்பெய்ட், பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதுவரை தடையற்ற சேவைகள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இலவச கால்கள் மேற்கொள்ளவும் இணையத்தைபப் பயன்படுத்தவும் ஐந்து இடங்களில் வீசேட் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். திரிச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள முப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் மக்கள் தங்களது போன்களை சார்ஜ் செய்துகொள்ளவும் இலவசமாக உறவினர், நண்பர்களுக்கு கால் செய்யவும், வைபை பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்துக்கு அளவில்லாத இலவச கால்கள், டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு முப்பது ரூபாய் வரை டாக்டைமும் ஒரு ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. CREDIT என்று 144க்கு குறுஞ்செய்தி அனுப்பியோ, *130*1# என்ற எண்ணை டயல் செய்தோ இதை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். வோடபோன் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதற்கான தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதுவரை தடையற்ற சேவைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்