நிதி ரீதியாக பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கவும் மொபைல் சேவைகளின் ஆழமான ஊடுருவலை மேம்படுத்துவதற்கான யுக்தியின் ஒரு பகுதியாகவும், உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்சுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்குகிறது.
அந்தவகையில், ரூ.599 ப்ரிபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், இத்துடன் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் கூடுதலாக வழங்க உள்ளது.
இந்த ரூ.599 ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே புதுப்பித்துக்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
ஏர்டெல் மற்றும் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இந்த புதுமையான ப்ரீபெய்ட் திட்டம், ஏர்டெலின் விநியோக வரம்பை அதிகரிக்கிறது. பாரதி ஆக்ஸா லைஃப் இன் இன்சூரன்ஸ் நிபுணத்துவம் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் உட்பட, மில்லியன் கணக்கான காப்பீடு இல்லாத மற்றும் காப்பீடு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஒவ்வொரு முறையும் கணிசமான ஆயுள் காப்பீட்டைப் பெறுவது மிகவும் எளிமையாகிறது. இதற்காக அவர்கள் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்யும் நேரமே போதுமானது.
இதுதொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் முரளி கூறும்போது, எங்கள் நெட்வொர்க் டிஜிட்டல் முறையில் பல சேவைகளை வழங்குவதற்கும் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு சிறந்த தளம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த புதுமையான திட்டத்தை வெளியிடுவதற்கும், இந்தியாவில் ஆயுள் காப்பீட்டை பெறுவதற்கான விலை, அணுகல் மற்றும் கட்டண ரீதியிலான தடைகளை நீக்குவதற்கும் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
இந்த இன்சூரன்ஸ் திட்டம் 18 முதல் 54 வயதுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். ஏர்டெல்லின் இந்த லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு எந்த ஒரு காகிதப் பணிகளோ அல்லது மருத்துவ பரிசோதனையோ தேவையில்லை. மேலும், காப்பீட்டு சான்றிதலும் உடனடியாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். மேலும் கோரிக்கையின் பேரில் காப்பீட்டின் நகல் வீட்டு விலாசத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
முதல் முறையாக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸில் பதிவு செய்து கொள்ளும் போது, வாடிக்கையாளர் முதலில் எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் (மக்கள் தொகையில்) 4 சதவீதத்திற்கும் குறைவான மக்களே காப்பீடு செய்துள்ளனர். ஆனால், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளது. வரும் 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 830 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்