Flipkart, Amazon நிறுவனங்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம், JioMart என்கிற ஆன்லைன் வர்த்தக முறையை அறிமுகம் செய்ய உள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் இந்த JioMart நிர்வகிக்கப்படும். இதை சோதனை செய்யும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், நவி மும்பை, தானே மற்றும் கல்யான் ஆகிய இடங்களில் வெளியிட்டிருந்தது. விரைவில், JioMart இந்தியா முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இது குறித்த முதல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஆர்.ஐ.எல் (Reliance Industries Limited) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இந்தப் புதிய திட்டம் மூலம், ரிலையன்ஸ், 3 கோடி விற்பனையாளர்களை, 20 கோடி குடும்பங்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளது.
தற்போது JioMart-க்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய JioMart மூலம், 50,000 வீட்டு உபயோகப் பொருட்களை இல்லத்திற்கே இலவசமாக கொண்டு வந்து கொடுப்பது, ரிட்டர்ன் கொடுப்பதற்கான சுதந்திரம், உடனடி டெலிவரி உள்ளிட்ட வசதிகளுடன் எடுத்து வரப்பட உள்ளது. இதன் மூலம் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களைப் பயன்படுத்தி மளிகைப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்க ரிலையன்ஸ் திட்டம் தீட்டுகிறது.
ஜியோ பயனர்களுக்கு ரிலையன்ஸ் ரீடெய்ல், JioMart-ல் உடனடியாக சேர்ந்தால் பல சலுகைகள் இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளதாம். உடனடியாக முன்பதிவு செய்தால் சுமார் 3,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ரீடெய்ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாம்.
இந்த புதிய திட்டத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம், தனியாக கிடங்கு அமைக்கப் போவதில்லை. மாறாக, ஆன்லைன் மூலம் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்தால், அவருக்கு அருகில் இருக்கும் கடைக்காரரிடமிருந்து பொருட்களை கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ரிலையன்ஸ் ஆன்லைன் - டூ - ஆஃப்லைன் என்று சொல்கிறது.
இது மட்டுமின்றி விரைவில் ரிலையன்ஸ் நிறுவனம், JioMart-க்கு என்று பிரத்யேக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளையும் அறிமுகம் செய்ய இருக்கிறதாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்