இந்தியாவில் வாட்சப் தளத்தின் வழியாக பொய்ச்செய்திகள் பரப்பப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்த இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சிறப்பு அணி அமைக்கப்பட இருப்பதாக அரசிடம் வாட்சப் தெரிவித்துள்ளது. இக்குழுவில் வாட்சப்பின் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் உள்ளடங்குவார். எனினும் அரசின் முக்கியக் கோரிக்கையான, பரப்பப்படும் ஒரு செய்தியை முதலில் உருவாக்கி அனுப்பியது யார் எனத் தோற்றுவாயைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் அளிக்கப்படாததால் அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
பொய்ச்செய்திகள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு, கூட்டு வன்முறைக் கொலைகள் அதிகமாகி வருவது வாட்சப்புக்குப் பெரும் தலைவலியாக மாறி வருகிறது. இதுதொடர்பாக அது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை தகவல் தொழில்நுட்ப அமைச்ச்சகத்திடம் வாட்சப் அளித்துள்ளது. எனினும் செய்திகளின் தோற்றுவாயை அறிவதற்கான நடவடிக்கைகள் பட்டியலிடப்படாததால் அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
இதுகுறித்து வாட்சப் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “அரசு எதிர்பார்ப்பது போல் செய்தால் மக்களின் தனிநபர் தகவல்கள், அந்தரங்கங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இது தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மக்கள் வங்கிகளுடன், மருத்துவர்களுடன், குடும்பத்தாருடன் பல முக்கிய உரையாடல்களை வாட்சப்பில் நிகழ்த்துகிறார்கள். காவல்துறையினரும் தங்களது விசாரணைகள் பற்றி, குற்ற அறிக்கைகள் பற்றி வாட்சப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் செய்திகளின் தோற்றுவாயை அறியும் வகையில் அமைப்பு மாற்றப்படுவது பாதுகாப்பற்றது. நாங்கள் உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டு பொய்ச்செய்தி பரவலைத் தடுக்க திட்டமிட்டுள்ளோம். மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வாட்சப் தொடர்ந்து கவனம் செலுத்தும்” என்றார். மேலும் “மக்கள் கூட்டாக வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க அரசு, சிவில் சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள் மூவருமே இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. எங்கள் தரப்பில் இருந்து ஏற்கனவே செய்திகள் வேகமாக அதிகம் பேருக்கு பார்வர்ட் செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வதந்திகள், போலியான செய்திகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில், “வாட்சப் நிறுவனம் இந்தியாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் அவர்கள் அரசு வைத்த சில கோரிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொய்ச்செய்தியை உருவாக்கிப் பரப்புபவர் யார் என்று தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அரசின் முக்கியக் கோரிக்கை” என்றார். அரசு ஃபேஸ்புக்குக்கு அனுப்பிய இரண்டாவது நோட்டிசில் “தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வாட்சப்பையும் தவறான வதந்தி பரப்ப உடந்தையாக இருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்படும்” என எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றமும் கடந்த மாதம், மக்கள் கூட்டாக வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. கொடூரமான கும்பலாதிக்க வன்முறைச் செயல்கள் வழக்கமாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்றும் கவலை தெரிவித்திருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்