நமது வாழ்வின் அன்றாட தருணங்களை, செயல்பாடுகளை எளிமையான முறையில் படங்கள், சிறிய வீடியோ காட்சிகளாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருந்த வாட்சப் ஸ்டேட்டஸ் விரைவில் ஃபேஸ்புக்குக்கு வருமானத்தை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாக மாற உள்ளது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நாம் காணும் வாட்சப் நிலைத்தகவல்களின் இடையே விளம்பரங்களும் காட்டப்படும் என்று வாட்சாப்பின் தந்தை நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்னும் இதுபோன்ற சேவையின் இடையே விளம்பரங்களைக் காட்டத் தொடங்கிய ஃபேஸ்புக் அதே பாணியில் வாட்சப்பிலும் விளம்பரம் செய்யப்போகிறது.
450 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் வாட்சப் வழியாக விளம்பரம் செய்வது ஃபேஸ்புக்குக்கு இயல்பான ஒரு திட்டமாகவே இருக்கமுடியும். வாட்சப் நிலைத்தகவல்களை எத்தனைப் பேர் பார்க்கிறார்கள் எனவும் அறியமுடியும் என்பதால் இது விளம்பரதாரர்களுக்கு கூடுதல் வசதியாக அமையும்.
ஸ்னாப்சாட்டிலுள்ள ஸ்டோரிஸ் என்பதை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் வாட்சப் தனது செயலியில் நிலைத்தகவல்களை அறிமுகப்படுத்தியது. எனினும் வாட்சப்பின் பயனர் எண்ணிக்கை ஸ்னாப்சாட்டை விட பன்மடங்கு அதிகம் ஆகும். வாட்சப் விளம்பரங்களுக்கு 34 பைசா முதல் 6 ரூபாய் வரை வசூலிக்க இருக்கிறது.
ஏற்கனவே ஊபர், புக் மை ஷோ போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து வாட்சப் பிசினஸ் என்னும் மாடல் கடந்த செப்டம்பரில் வியாபார நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இப்போது முப்பது இலட்சம் பேர் இணைந்துள்ளார்கள்.
எனினும் மொத்தத்தில் ஃபேஸ்புக்கின் வருமானம் பல்வேறு காரணங்களால் சரிவைச் சந்தித்து வருகிறது. அடுத்த சில காலங்களுக்கு இது தொடரும் என்றே அந்நிறுவனமும் கணித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்