டிக் டாக் செயலிக்கு நீதிமன்றம் “இடைக்கால” தடை விதித்திருந்தாலும், அந்த செயலி குறித்த பரபரப்பு அடங்கியதாக தெரியவில்லை. இந்நிலையில், ‘டிக் டாக் செயலியில் தவறு நடப்பதை கண்காணிக்க ஒரு பெரிய குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் டிக் டாக் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. டிக் டாக் செயலியில், ‘ஆபாச வீடியோக்கள்' மற்றும் ‘குழந்தைகளை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்கள்' இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ByteDance என்கின்ற சீன நிறுவனத்தால்தான் டிக் டாக் செயலி உருவாக்கப்பட்டது. தற்போது 150 நாடுகளில் 75 மொழிகளில் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மத்திய அரசிடமிருந்து கோரிக்கை வந்ததை அடுத்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்தியாவில் டிக் டாக் செயலியை நீக்கியுள்ளன.
இந்நிலையில் டிக் டாக் இந்தியாவின் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் சுமேதாஸ் ராஜ்கோபால், “தற்போது டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருப்பது தற்காலிகத் தடையாகும். சீக்கிரமே அரசிடமிருந்து எங்களுக்கு ஏற்ற பதில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
அவர் மேலும், “டிக் டாக் செயலி தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளது” என்றும் தகவல் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, டிக் டாக் செயலிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து அரசு சார்பில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிக் டாக் செயலியை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த செயலி தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்தான வழக்கு மீண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ராஜ்கோபால் தொடர்ந்து தற்போதைய பிரச்னை குறித்து பேசுகையில், “டிக் டாக் செயலியில் எந்த மாதிரி வீடியோக்கள் வருகிறது என்பதை கண்காணிக்க ஒரு குழு உள்ளது. அந்த குழு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கி வருகிறது. கடந்த வாரம் மட்டும் நாங்கள் 60 லட்சம் வீடியோக்களை செயலியில் இருந்து நீக்கியுள்ளோம். டிக் டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றுள்ளார்.
டிக் டாக் செயலி இதற்கு முன்னர் வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்