ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்வதில் இந்தியாவின் முன்னணி தளமான ஸ்விக்கி, புதிய கட்டண சேவையை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எல்லா நேரத்திலும், ஆர்டர் செய்யக்கூடிய பகுதியில் உள்ள எல்லா உணவகங்களில் இருந்தும் இலவச டெலிவரியை இச்சேவையில் பெறலாம். இலவச டெலிவரியோடு, எந்நேரத்திலும் கூடுதல் விலை (surge pricing) கொடுக்கத் தேவை இன்றி சாதாரண விலைக்கே உணவினை ஆர்டர் செய்துகொள்ளலாம். குறைகளைத் தீர்ப்பதிலும் ஸ்விக்கி சூப்பர் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இது ஒரு மாதம், மூன்று மாதம் என இரண்டு பிளான்களாக அறிமுகம் ஆகிறது. ஒரு மாதத்துக்கான கட்டணம் 99-149 ரூபாயாக இருக்கும். மூன்று மாதத்துக்கான கட்டணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய கட்டண சேவை அறிமுகம் ஆகிறது. வரும் மாதங்களில் இது அனைவருக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் புதிய சலுகைகளையும் எதிர்காலத்தில் ஸ்விக்கி சூப்பர் சந்ததாரர்களுக்கு அளிக்க இருக்கிறார்கள்.
இதன் மூலம் மூன்று வகையான கட்டண சேவைத்திட்டங்களை வழங்கி வரும் சொமாட்டோவிற்குப் போட்டியாக ஸ்விக்கியும் களத்தில் குதிக்கிறது. சொமாட்டோ ட்ரீட்ஸ் ஆண்டுக்கு 249ரூபாய், இதில் ஒவ்வொரு ஆர்டரின்போதும் ஒரு இனிப்பு இலவசமாகக் கிடைக்கும். இது தவிர சொமாட்டோ பிக்கிபாங்க், குறிப்பிட்ட சில உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சொமாட்டோ கோல்டு ( உணவு 1+1, பானங்கள் 2+2) ஆகிய சேவைகளையும் சொமாட்டோ ஏற்கனவே வழங்கிவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்