ஜியோ நிறுவனம், சீக்கிரமே உலகின் மிகப் பெரிய ‘சூப்பர் ஆப்-ஐ' வெளியிட தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரே செயலி மூலம் 100 சேவைகளை ஜியோ நிறுவனம் வழங்க வாய்ப்புள்ளது. ஜியோவின் இந்தப் புதிய திட்டம், ஏற்கெனவே இணைய வணிகத்தில் கோலோச்சி வரும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ, தற்போது சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களை இந்தியாவில் கொண்டுள்ளது.
ஜியோ நிறுவனம், இந்த சமயத்தில் ஒரு புதிய செயலியைத் தொடங்க உள்ளது, பல விதங்களில் அந்த நிறுவனத்துக்கு லாபம் தரும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர்.
‘ஒரே செயலி. அதுவும் சூப்பர் செயலி மூலம், தனக்கு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் பலதரப்பட்ட சேவைகளை வழங்க முடியும். இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை அசைக்க முடியாத ஒரு இடத்தில் வைக்கும்' என்று சி.எம்.ஆர் வல்லுநரான பிரபு ராம் கூறுகிறார்.
இணைய வணிகம், டிக்கெட் முன்பதிவு, பணப் பறிமாற்றம் என அனைத்தையும் ஜியோவின் இந்த சூப்பர் செயலி பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆன்லைன் வணிக சந்தையின் மதிப்பு 84 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது 2017-ல் வெறும் 24 பில்லியன் டாலர்கள்தான் இருந்ததாம். தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வரும் செயலி மூலம், இதில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இது குறித்துப் பேசுகையில், ‘இந்த புதிய தளமானது நாட்டில் இருக்கும் 3 கோடி வணிகர்களின் வாழ்க்கையை மாற்றும். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் டூ ஆஃப்லைன் தளத்தை உருவாக்க ரிலையன்ஸ் முயன்று வருகிறது' என்று சென்ற நவம்பர் மாதம் கூறினார்.
ஜியோ மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள ரிலையன்ஸ், அடுத்ததாக ஜிகாஃபைபர் தொழில்நுடபம் மூலம் இணைய உலகத்தையும் தனதாக்க முயன்று வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்