பேஸ்புக் நிறுவனத்தின் ‘மெசன்ஜர் கிட்ஸ்’ ஆப் தற்பொழுது கனடா, பெரு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான இந்த ஆப்பை திரும்ப பெற ஆய்வாளர்கள் அறிவுறுத்தியும், வீடியோ அழைப்பு மற்றும் மெசேஜிங் வசதியுடன் கூடிய ‘மெசன்ஜர் கிட்ஸ்’ பயன்பாட்டை பேஸ்புக் நிறுவனம் கனடா மற்றும் பெருவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு, ‘மெசன்ஜர் கிட்ஸ்’ எனும் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ‘மெசன்ஜர் கிட்ஸ்’ ஆப்பின் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு வெர்ஷன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நல ஆய்வாளர்கள் இந்த ஆப் பயன்பாட்டை தடை செய்ய கோரி பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கிற்கு கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“சமூக வலைதளங்களின் பயன்பாட்டால் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேஸ்புக் போன்ற ஆப் பயன்பாடுகளை உபயோகிக்க தடை செய்ய வேண்டும்” என்று எழுதி இருந்தனர் ஆய்வாளர்கள். பயன்பாட்டை தடை செய்ய மறுத்த பேஸ்புக் நிறுவனம், ’பொறுப்புடன் கூடிய பயன்பாடு’ என அறிவித்து பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் ஆப்பினை மேலும் இரண்டு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
‘சமூகம் மற்றும் உணர்ச்சிகளை கற்றல்’ எனும் பெயரில் அன்பையும் பொறுப்பையும் சொல்வதாக சில ஸ்டிக்கர்களை இந்த ஆப் பயன்பாட்டில் பதிவேற்றம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
“அன்பாக இரு, பொறுப்பாக இரு, பாதுகாப்பாக இரு, மகிழ்ச்சியாக இரு” - போன்ற உறுதி மொழிகளை மெசன்ஜர் கிட்ஸ் ஆப்பில் பதிவேற்றியுள்ளனர்.
‘யேல் உணர்வுசார் நுண்ணறிவு மையம்’ மற்றும் உலகளாவிய சில ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ‘Appreciation Mission’ எனும் பயன்பாட்டின் மூலம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நல்ல விஷயங்களை கண்டறிந்து பாராட்டும் குணத்தை குழந்தைகளிடம் ஊக்கப்படுத்துவதாக கூறுகிறது ஃபேஸ்புக்.
“வீடியோ அழைப்பு செய்யவும், மெசேஜ் அனுப்பவும் குழந்தைகள் கற்று கொள்ள இந்த பயன்பாடு உதவும்” என பேஸ்புக் தயாரிப்பு மேலான்மை இயக்குநர் லோரென் செங் மற்றும் தயாரிப்பு இயக்குநர் தாருண்யா கோவிந்தராஜன் ஆகியோரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த பயன்பாடுகளை தொடர்ந்து, ஆய்வாளர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றங்களையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது. “உதரணமாக, பெற்றோர் இருவரும் குழந்தையின் செயற்பாட்டை கண்கானிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு இணங்க, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தையின் செயற்பாட்டை கண்கானிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்