அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் ட்விட்டரில் பிளாக் செய்யப்பட்ட ஏழு தனிநபர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம், அவர்களை டிரம்ப் அன்பிளாக் செய்யவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து டிரம்ப் பிளாக் செய்துள்ள மேலும் 41 பேரை அன்பிளாக் செய்ய வேண்டும் என கருத்து சுதந்திரத்துக்கான அமெரிக்க அமைப்பொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
மே 23 அன்று அமெரிக்க மாவட்ட நீதிபதி நவோமி ரெய்ஸ் தனது தீர்ப்பில், 'குடியரசுத் தலைவர், பிற அரசு அலுவலர்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள், மக்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்கும் பொதுத்தளங்கள் ஆகும். அவர்களது பார்வையை வெளிப்படுத்தும் வகையில் சில பின்னூட்டங்களைப் பதிவிட்டதற்காக பிளாக் செய்வது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் சட்டத்திருத்தத்திற்கு எதிரானது' என்று கூறியிருந்தார்.
இதனால் ஜூன் மாதம் இந்த எழுவரின் கணக்குகளை டிரம்ப் அன்பிளாக் செய்தார். தற்போது கொலம்பியா பல்கலையின் 'நைட் (Knight) முதல் சட்டத்திருத்த நிறுவனம்' டிரம்பால் தொடர்ந்து தடை செய்து வைக்கப்பட்டுள்ள வேறு 41 ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை அமெரிக்க நீதித்துறைக்கு அனுப்பியுள்ளது.
"இவர்களன்றி மேலும் பலரும் டிரம்பால் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இப்பட்டியல் முழுமையானதல்ல. இதில் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் எனப் பல தனிநபர்களும் அடங்குவர்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இவர்கள் அனைவரும் டிரம்பை விமர்சித்த ஒரே காரணத்துக்காவே பிளாக் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேற்கோள் காட்டிய அமெரிக்க அரசியலமைப்பின் முதல் சட்டதிருத்தத்தின்படி, விமர்சனம் செய்த காரணத்துக்காகவே ஒருவரை பிளாக் செய்வது தவறாகும்" என்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் கேட்டி ஃபால்லோ கூறினார்.
வெள்ளை மாளிகை இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
டிரம்பின் ட்விட்டர் கணக்கை 53.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். தனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரச்சாரம் செய்வது, கொள்கைத்திட்டங்களை அறிவிப்பது, விமர்சகர்களைத் தாக்குவது என இந்த ட்விட்டர் கணக்கு டிரம்பின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான, சர்ச்சைக்குரிய பங்கு வகிக்கிறது. இதில் தனக்கு எதிராகப் பின்னூட்டங்கள் இடும் பலரையும் பதிலளிக்க முடியாதவாறு டிரம்ப் பிளாக் செய்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்