ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட மென்பொருள் 'பக்' ஒன்று வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கணக்குகளை அன்பிளாக் செய்ததாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் பிளாக் செய்து வைத்திருந்த ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை, தற்காலிகமாக அதன் நெட்வோர்க்கிலும், மெசேஞ்சரிலும், அந்த 'பக்' அன்பிளாக் செய்துள்ளதை அந்த பயனர்களுக்கு தெரியப்படுத்துவதாக கூறியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு சர்ச்சைக்கு பிறகு இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற போராடி வருகிறது ஃபேஸ்புக். கடந்த மே 29 முதல் ஜுன் 5 வரை இருந்த இந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
ஃபேஸ்புக் தலைமை பிரைவெசி அதிகாரி எரின் ஏகன் தன்னுடைய பதிவில், “ஒருவருக்கு மற்றொருவரை பிளாக் செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுவது மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நடந்ததை விவரிக்க விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் ஒருவரை பிளாக் செய்வது, அவர்கள் உங்களுடைய ப்ரொஃபைலை பார்ப்பதிலிருந்தும், மெசேஜ் செய்வதலிருந்தும் தடுத்து அந்த நபரை நிரந்தரமாக அன்ஃபிரண்ட் செய்கிறது.
”ஒருவர், ஃபேஸ்புக்கில் இன்னொருவரை பிளாக் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர்களுடைய உறவு முறை மாறியிருக்கலாம் அல்லது தங்களுக்கு விருப்பமில்லாதவற்றை பதிவிடும் நபரிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கலாம். சில நேரங்களில் துன்புறுத்தல்கள் போன்ற கடுமையான காரணங்களால் கூட ஒருவர் பிளாக் செய்யப்படலாம்” என்றார் ஏகன்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் படி, “இந்த தொழில்நுட்பக் கோளாறு, ஃபேஸ்புக்கில் அன்பிரண்ட் செய்தவரை மீண்டும் நட்பு வட்டத்தில் இணைக்கவில்லை, மாறாக பிளாக் செய்யப்பட்ட ஒருவர் மெசேஞ்ரின் மூலம் உங்களை தொடர்புகொள்ள முடியும். இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருவரை மட்டுமே பிளாக் செய்திருந்தவர்கள். தற்போது அந்த ஒரு கணக்கு தான் அன்ப்ளாக் செய்யப்பட்டிருக்கிறது”
”அன் பிளாக் செய்யப்பட்டவர்கள் நண்பர்களுடன் பகிரப்படும் விஷயங்களைப் பார்க்கமுடியாது என்றாலும் பரவலான ஆடியன்ஸிடம் பகிரப்படும் விஷயங்களைப் பார்த்திருக்க முடியும்” என்றார் ஏகன்.
இந்த பக் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய பிளாக் பட்டியலை சரிபார்ப்பதற்கான அறிவிப்பை பெறுவர் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்ஜ் ஐரோப்பிய பாராளுமன்றத்தாலும், அமெரிக்க காங்கிரஸாலும் (பாராளுமன்றம்) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு மோசடியால் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 87 மில்லியன் பயனர்களின் தகவல்களை, 2016-ம் ஆண்டு அமெரிகக் அதிபர் தேர்தலின் போது, டோனால்ட் ட்ரம்பிற்கு வேலை செய்த பிரட்டன் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவால் எடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்