'Mi 9T' ஆசியாவில் அறிமுகமாகும் தேதிகள் வெளியாகியுள்ளது. சியோமி மலேசியாவின் அறிவிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன், அந்த நாட்டில் ஜூன் 20 அறிமுகமாகும் எனக் கூறியுள்ளது. இந்த அறிமுகத்தின் பொழுது மற்ற ஆசிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனான ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் சென்ற மாதம் சீனாவில் முதன்முறையாக அறிமுகமானது. மேலும், முன்னதாகவே சியோமி இந்தியா நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்திருந்தாலும், எந்த நிறுவனத்தின் பெயரில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகப்போகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படாத தகவலாகவே உள்ளது.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்த சியோமி மலேசியா நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 20-ல் வெளியாகவுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது. அறிமுக நிகழ்வு எங்கு நடைபெறவுள்ளது, அதன் நேரம் குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து சியோமி இந்தியா நிறுவனம் முன்னதாகவே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை மாதத்தின் இடையில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
'Mi 9T' ஸ்மார்ட்போனின் விலை!
முன்னதாக அறிமுகமான இந்த 'Mi 9T' ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை, 329 யூரோக்கள் (25,900 ரூபாய்) எனவும், மற்றொரு வகையான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi 9T' ஸ்மார்ட்போன் விலை, 369 யூரோக்கள் (29,000 ரூபாய்) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 17-ல் ஸ்பெயினில் விற்பனைக்கு வரவுள்ளது.
'Mi 9T' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
முன்பு கூறியது போலவே, இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ K20-யின் மாற்றி அமைக்கப்பட்ட வெர்ஷன். இந்த ஸ்மார்ட்போன், ரெட்மீ K20 போன்றே இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது.
6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. இதன் மற்ற இரு கேமராக்கள், 13 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமரா. மேலும், இதன் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமராவை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 18W அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும்,இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, 3.5mm ஆடியோ ஜேக் வசதி மற்றும் வை-பை வசதிகளை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்