Photo Credit: Imgur/ Cheetohz
தனது பிக்சல் 3 போனுக்கு ரிஃபண்டு கேட்ட உரிமையாளருக்கு 10 பிக்சல் 3 போன்களை கூகுள் நிறுவனம் அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ரெடிட் தளத்தில் சீதோஸ் என்கிற நபர் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை நிற கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட் போனை வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த போனில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு ரிஃபண்டு கேட்டு கூகுள் நிறுவனத்திடம் அனுப்பியுள்ளார். சுமார் 80 டாலர் ரிஃபண்டுதான் அவருக்கு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்புப்படி 5,500 ரூபாய் ஆகும். மீதி ரிஃபண்டு கொடுப்பதற்கு பதில் கூகுள் நிறுவனம் 10 பிக்சல் 3 போன்களை அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.
இது குறித்து ‘ஆண்ட்ராய்டு போலீஸ்' தளம், ‘பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் பல பிரச்னைகள் இருக்கும். ஆனால், கூகுளுக்கு இருப்பது மிக வித்தியாச பிரச்னை. ஒரு ரெடிட் பயனர், கூகுள் நிறுவனத்திடம் ஒரு பிக்சல் 3 போனுக்கு ரிஃபண்டு கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு வந்ததோ 10 பிக்சல் 3 போன்கள். தற்போது அவர் வேறு வழியில்லாமல் கூகுள் கவனத்தை ஈர்க்க தனது விசித்திர கதையை ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்' என்று தெரிவிக்கிறது.
தற்போது தன் கையில் இருக்கும் 10 பிக்சல் 3 போன்களை சீதோஸ் என்கிற ரெடிட் பயனர், கூகுள் நிறுவனத்துக்குத் திரும்ப அனுப்ப முயன்று வருகிறார். மேலும் தனக்கு வரவேண்டிய மீதமுள்ள தொகையையும் வாங்க முயன்ற வருகிறார்.
ஆண்ட்ராய்டு போலீஸ் இந்த விவகாரம் குறித்து மேலும், ‘இன்னும் 900 டாலர் பணத்தை கூகுள் தனக்கு கொடுக்க வேண்டும் என்று சீதோஸ் நினைக்கிறார்' என்று கூறுகிறது.
முன்னதாக சீதோஸ், தனது பழுதான போனுக்கு ரீஃபண்டு கேட்டதோடு தனியாக பிங்க் நிறத்திலான இன்னொரு பிக்சல் 3 போனை ஆர்டர் செய்துள்ளார். அதை கூகுள் நிறுவனம் தவறுதலாக புரிந்து கொண்டு 10 பிங்க் நிறத்திலான பிக்சல் 3 போன்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
IANS தகவல்களுடன் பதியப்பட்டது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்