வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை ஒரு வித MP4 ஃபைல் மூலம் ஹேக் செய்ய முடியும் என்கின்ற தகவல் வந்துள்ளது. பழைய வாட்ஸ்அப் வெர்ஷன்களில்தான் இந்த ஹெக் சாத்தியம் என்றும், புதிய வெர்ஷன்களில் அப்படி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அடையாளம் தெரியாத புது எண்ணிலிருந்து MP4 ஃபைல் உங்களுக்கு வருகிறது என்றால், அதை தரவிறக்கம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. MP4 ஃபைலை தரவிறக்கம் செய்வதன் மூலம், போனில் இருக்கும் தகவல்களை வேறொரு நபர் ஹேக் செய்ய முடியுமாம்.
இது குறித்து வாட்ஸ்அப்-ன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம், “ஹேக் செய்வதற்கென்று பிரத்யேகமாக ஒரு MP4 ஃபைல் உருவாக்கப்பட்டுள்ளது. அதை வாட்ஸ்அப் பயனர்கள் தரவிறக்கம் செய்யும் பட்சத்தில் போனை ஹேக் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனமான பெகாசஸ் மூலம், இந்தியாவில் இருக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 1,400 பேரின் வாட்ஸ்அப், ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியானது. இந்திய அரசுக்கும் இந்த ஹேக் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை முற்றிலும் மறுத்தது மத்திய அரசு.
வாட்ஸ் அப் நிறுவனமும், இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியது.
இந்நிலையில்தான் இந்த MP4 ஃபைல் மூலம் ஹேக் செய்யும் தகவல் வந்துள்ளது. 2.19.274 -க்கு முந்தைய ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் வெர்ஷன், 2.19.100 -க்கு முந்தைய ஐபோன் வாட்ஸ்அப் வெர்ஷன், 2.25.3 -க்கு முந்தைய என்டர்பிரைஸ் வெர்ஷன், 2.19.104 -க்கு முந்தைய வாட்ஸ்அப் பிசினஸ் ஆண்ட்ராய்டு வெர்ஷன், 2.19.100 -க்கு முந்தைய வாட்ஸ்அப் பிசினஸ் ஐஓஎஸ் வெர்ஷன், 2.18.368-வரையிலான விண்டோஸ் வாட்ஸ்அப் வெர்ஷன் உள்ளிட்டவைகளில் இந்த ஹேக் நடவடிக்கையை மேற்க்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்